டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் | Tamilnadu CM Stalin writes to PM Modi opposing tungsten mining proposal in Madurai

1341479.jpg
Spread the love

சென்னை: மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய ஒன்றிய சுரங்கத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்கம் தோண்டுவதற்கான ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும் சுரங்க அமைச்சகத்துக்கு அறிவுறுத்துமாறும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள அக்கடிதத்தில், “மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு உரிமம் வழங்கியதால், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதட்டமான நிலைமையை குறிப்பிட்டு, இந்தியப் பிரதமர் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு ஒன்றிய அரசு வழங்கியுள்ள உரிமத்தினை ரத்து செய்திட வேண்டும்.

மேலும், இதுபோன்ற முக்கியமான கனிமங்களின் சுரங்க உரிமங்களை ஒன்றிய அரசு ஏலம் விடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த தமிழ்நாடு அரசின் கவலைகளை, நீர்வளத் துறை அமைச்சரின் 3-10-2023ஆம் நாளிட்ட கடிதத்தின் மூலமாக ஏற்கெனவே ஒன்றிய அரசுக்குத் தெரிவித்திருந்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக, ஒன்றிய நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர், தனது 2-11-2023 நாளிட்ட கடிதத்தில், நாட்டின் நலன்களுக்காக, சுரங்க அமைச்சகத்தின் முக்கியமான கனிமங்களை ஏலம் விடுவதைத் தடுக்க முடியாது என்று குறிப்பிட்டு, தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்திருந்தார்.

இதற்கிடையில், கடந்த 7-11-2024 அன்று, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் தொகுதியில் சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தை தகுதியான நிறுவனமாக ஒன்றிய சுரங்கத் துறை தேர்வு செய்து அறிவித்துள்ளது.

மேற்படி டங்ஸ்டன் தொகுதியில் கவட்டையம்பட்டி, எட்டிமங்கலம், ஏ.வல்லாளபட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி மற்றும் நரசிங்கம்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. அவற்றில், அரிட்டாபட்டி ஒரு பல்லுயிர்ப் பெருக்க வரலாற்றுத் தலம். இது குடைவரைக் கோயில்கள், சிற்பங்கள், சமணச் சின்னங்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள் மற்றும் பஞ்சபாண்டவர் கல் படுக்கைகள் உள்ளிட்ட தொல்பொருள் நினைவுச் சின்னங்களுக்குப் பிரபலமானது. இந்தப் பகுதியில் எந்தவொரு சுரங்க நடவடிக்கை மேற்கொண்டாலும், அது ஈடுசெய்ய முடியாத அளவுக்கு சேதங்களை ஏற்படுத்தும்.

மேலும், மக்கள் தொகை அதிகம் உள்ள கிராமங்களில், வணிக ரீதியாக இதுபோன்று சுரங்கம் தோண்டுவது கண்டிப்பாக இக்கிராமங்களில் உள்ள மக்களை வெகுவாக பாதிக்கும் என்றும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் உள்ள அப்பகுதி மக்களுக்கு ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.

எனவே, இந்தப் பகுதிகளில் இதுபோன்ற சுரங்கத் தொழிலை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

மேற்கண்ட சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய ஒன்றிய சுரங்கத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுக.

சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்கம் தோண்டுவதற்கான ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும் சுரங்க அமைச்சகத்துக்கு அறிவுறுத்துங்கள்.” என்று பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *