டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு – முழு விவரம் | Mines Ministry Decides to Annul the Auction of Nayakkarpatti Tungsten Mineral Block

1348078.jpg
Spread the love

புதுடெல்லி: பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசின் உறுதிப்பாட்டையும் கருத்தில் கொண்டு, டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டியை, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் குழுவினர் டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம பகுதியில் அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தளமும் பல கலாச்சார பாரம்பரிய தளங்களும் உள்ளன என்று மத்திய அமைச்சரிடம் தெரிவித்தனர்.

சுரங்க அமைச்சகம் 2024 டிச.24 தேதியிட்ட ஒரு செய்திக் குறிப்பில், ‘டங்ஸ்டன் ஏல நடைமுறைக்குப் பிறகு, அப்பகுதியில் பல்லுயிர் பாரம்பரிய தளம் உள்ளது என்ற அடிப்படையில் ஏலத்துக்கு எதிராக கருத்துகள் பெறப்பட்டுள்ளன’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜன.25-ம் தேதி அன்று நடைபெற்ற சந்திப்பின் போது, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்யுமாறு அப்பகுதி மக்களின் சார்பில் சென்றிருந்த விவசாயிகள் குழுவினர், மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்தக் குழுவினரின் கோரிக்கைகளை பொறுமையாகக் கேட்டறிந்த மத்திய அமைச்சர், பல்லுயிர் பாரம்பரிய பாதுகாப்புக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தார். விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, இப்பகுதியில் பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசின் உறுதிப்பாட்டையும் கருத்தில் கொண்டு, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம ஏலத்தை ரத்து செய்ய சுரங்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது’ என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை சொல்வது என்ன? – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று (ஜன.23) மாலை செய்தியாளர்களிடம் கூறியது: “மதுரை மேலூர் தொகுதியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் ஒப்பந்தத்துக்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் இந்த அரசாணை கொண்டு வரப்பட்டுள்ளது. டங்ஸ்ட்ன் சுரங்க விவகாரம் தொடர்பாக திமுகவை போல் நாங்கள் அரசியல் செய்யாமல், ஆக்கபூர்வமான கட்சியாக செயல்பட்டுள்ளோம். டங்ஸ்டன் சுரங்க நடவடிக்கை ரத்து என்பது ஜனநாயகத்தின் வெற்றியாகும். பிரதமர் தமிழகத்தின் மீதுள்ள அன்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்” என்றார்.

அரிட்டாப்பட்டியில் கொண்டாட்டம்: டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அரிட்டாப்பட்டி, நாயக்கர்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கிராமத்தின் மையப்பகுதியில் திரண்ட மக்கள் கரவொலிகளை எழுப்பி தங்களது கோரிக்கையை ஏற்று திட்டத்தை ரத்து செய்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.

‘பணிந்தது மத்திய அரசு’ – முதல்வர்: “நான் முதல்வராக இருக்கும்வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன். சட்டப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம். மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது. இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக் கூடாது; மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க.வும் துணைபோகக் கூடாது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

முன்னதாக, மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி மேலூர் பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் உள்ள வல்லாளப்பட்டி, அரிட்டாப்பட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் குழுவுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநிலச் செயலாளர் பேராசிரியர் இராம.சீனிவாசன் உள்ளிட்டோர் டெல்லியில் மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை புதன்கிழமை நேரில் சந்தித்தனர்.

அப்போது மத்திய அமைச்சரிடம், மேலூர் தொகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர். டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்தை ரத்து செய்யும் வகையில் சாதகமான முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என அமைச்சர் கிஷன் ரெட்டி விவசாயிகளுக்கு உறுதி அளித்தார். இந்நிலையில், டங்ஸ்டன் கனிம ஏலத்தை ரத்து செய்ய மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *