டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து: முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு | tungsten mining project Cancel: Stalin, political party leaders welcome

1348107.jpg
Spread the love

டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க் கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: நான் முதல்வராக இருக்கும் வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன். சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம். மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்துள்ளது. இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை மத்திய அரசு வெளியிடக் கூடாது. மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அதிமுகவும் துணைபோக கூடாது.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: மக்களின் குரலாக களத்தில் போராட்டங்கள், சட்டப்பேரவையில் டங்ஸ்டன் தடுப்போம், மேலூர் காப்போம் என்ற வாசகம் பதிந்த மாஸ்க் அணிந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் சென்றதுடன், ஆதாரங்களுடன் நானும் பேரவையில் திமுகவின் கபட நாடகத்தை எடுத்துவைத்து பேசியதன் தொடர்ச்சியாக, அதிமுகவின் முன்னெடுப்புகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் இரட்டை வேட நாடகமாடி மக்களை ஏமாற்ற முயற்சித்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சதிவேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: அரிட்டாப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள மக்களின் உறுதியான போராட்டமும், தமிழக சட்டப்பேரவையில் இயற்றிய தனித் தீர்மானமும் கார்ப்பரேட்டுகளுக்கு துணை போக இருந்த மத்திய பாஜக அரசின் முயற்சிகளை தவிடு பொடியாக்கியுள்ளது.

நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: முழுக்க முழுக்க தன்னெழுச்சியாக போராடிய மதுரை மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியே தவிர வேறொன்றுமில்லை.

பாமக தலைவர் அன்புமணி: மேலூர் அரிட்டாப்பட்டி பகுதியை இனி வரும் காலங்களிலும் பாதுகாக்கும் வகையில் பல்லுயிர் புராதனச் சின்னங்கள் பாதுகாப்பு மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அதற்கான சட்டத்தை தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரானது என்ற எதிர்க் கட்சியினரின் பிரச்சாரம் பொய்த்துவிட்டது. அவர்களுக்கு டங்ஸ்டன் சம்பந்தமான மத்திய அரசின் அறிவிப்பு சரியான பாடம்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: வெற்றி பெறும் வரை ஒன்றுபட்டு போராடிய பொதுமக்களுக்கும், மக்கள் உணர்வுகளை பிரதிபலித்த தமிழக அரசுக்கும், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கும் வாழ்த்துக்கள்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: டங்ஸ்டன் சுரங்க ஏலம் நிறைவடையும் வரை எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காமல், திட்டத்துக்கு உறுதுணையாக இருந்த திமுக அரசை மதுரை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். புராதானச் சின்னங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான எந்தவித திட்டத்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: போராட்ட களத்தில் உறுதியாக நின்ற மக்களுக்கு கிடைத்த வெற்றி. மேலும், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கும், டங்ஸ்டன் திட்டம் தமிழகத்தில் எங்கும் வராது என்று அறிவித்த மத்திய அரசுக்கும் பாராட்டு. இதேபோல் முன்னாள் ஆளுநர் தமிழிசை உள்ளிட்டோரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

முன்னதாக டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பு ரத்து செய்யப்பட்டதையொட்டி, சென்னை, தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகத்தில் கட்சியின் துணைத் தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *