டங்ஸ்டன் சுரங்கம் வருவதை எதிர்த்தும், பொதுமக்கள் நடத்திய போராட்டங்களுக்கு ஆதரவு அளித்ததற்காகவும் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான பழனிசாமியை சென்னையில் அவரது இல்லத்தில் அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும் மேலூரில் நடைபெறவுள்ள பாராாட்டுக் கூட்டத்துக்கு வருமாறும் அப்போது அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைவதை எதிர்த்து, பொதுமக்களின் தொடர் போராட்டம் நடந்தது. இதற்கு ஆதரவு அளித்ததுடன், சட்டப்பேரவையிலும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி வலியுறுத்தினர். டங்ஸ்டன் சுரங்க ரத்து தீர்மானத்தையும் ஆதரித்தார். இந்நிலையில் மத்திய அரசு டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்தது. இந்நிலையில் டங்ஸ்டன் சுரங்கத்தால் பாதிக்கப்படவிருந்த பகுதிகளான அரிட்டாபட்டி, வள்ளாலபட்டி, நாயக்கர்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், முக்கியப் பிரமுகர்கள், பொதுமக்கள் நேற்று பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது அவருக்கு வாழைத்தார், பழங்கள், விதை நெல்மணிகள் ஆகியவற்றை வழங்கியதுடன் பச்சைத் துண்டு, முண்டாசு அணிவித்து நன்றி தெரிவித்தனர். மேலும், மேலூர் தொகுதி மக்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தவுள்ளதாகவும் அதில் பங்கேற்க வருமாறும் அப்போது அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
இந்த சந்திப்பின்போது, அதிமுக அமைப்புச் செயலாளரும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரும் திருப்பரங்குன்றம் எம்எல்ஏவுமான ராஜன் செல்லப்பா, மேலூர் எம்எல்ஏ பெரியபுள்ளான் என்கிற செல்வம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.