கர்ப்ப காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்குத் தேவையான ரத்த ஓட்டம் மற்றும் ஊட்டச்சத்துகள் நஞ்சுக்கொடி (Placenta) வழியாகவே செல்லும். இந்த ரத்த ஓட்டத்தில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
த்ரோம்போஃபிலியா (Thrombophilia) எனப்படும் பிரச்னை, அதாவது ரத்தம் எளிதில் உறையக்கூடிய ஒரு நிலை உருவாகலாம். இதனால் நஞ்சுக்கொடிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, குழந்தைக்கு வளர்ச்சித் தடை (IUGR) அல்லது கருவிலேயே குழந்தை இறந்துபோவது (IUD) போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
ஆன்டி-பாஸ்போலிபிட் ஆன்டிபாடி சிண்ட்ரோம் (APS) எனப்படும் தற்காப்பு மண்டலக் குறைபாடு (Autoimmune issue) ஏற்படலாம். ரத்தப் பரிசோதனை மூலம் இது உறுதி செய்யப்பட்டால், கர்ப்ப காலம் முழுவதும் ஆஸ்பிரின் (Aspirin) மற்றும் லோ மாலிகுலர் வெயிட் ஹெப்பாரின் (LMWH) சிகிச்சை அளிக்கப்பட வேண்டியிருக்கும். இது ஆரோக்கியமான குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

சில குழந்தைகளுக்குப் பிறவியிலேயே பெற்றோரிடமிருந்து த்ரோம்போஃபிலியா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். புரதம் C (Protein C) அல்லது புரதம் S (Protein S) குறைபாடு போன்ற மரபணு ரீதியான காரணங்களாலும் ரத்தம் உறைய வாய்ப்புள்ளது.
கர்ப்ப காலத்தில் ஹெப்பாரின் பாதுகாப்பானதா என்ற கேள்வியும் பலருக்கு இருக்கலாம். அந்தப் பயமே தேவையில்லை. கர்ப்ப காலத்தில் ஹெப்பாரின் பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானது. இது நஞ்சுக்கொடியைத் தாண்டி குழந்தைக்குச் செல்லாது. எனவே, குழந்தைக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. இது தாயின் ஆரோக்கியத்திற்கு மட்டுமே உதவும்.
அதே சமயம், அனைத்து கருச்சிதைவுகளுக்கும் ஹெப்பாரின் மருந்து வழங்கப்படுவதில்லை. குரோமோசோம் பிரச்னைகள், கருப்பை பிரச்னைகள் அல்லது ஹார்மோன் குறைபாடுகள் உள்ளனவா என்று முதலில் பரிசோதிக்கப்படும்.
ஏபிஎஸ் டெஸ்ட் எனப்படும் ரத்தப் பரிசோதனையில் ரத்தம் உறையும் பிரச்னை இருப்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே இந்தச் சிகிச்சை அளிக்கப்படும். இத்தகைய சூழலில் ஹெப்பாரின் உயிர் காக்கும் மருந்தாகச் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.