இந்தியா எல்லைப்பகுதியில் அடிக்கடி சீன ராணுவ வீரர்கள் வாலாட்டி வருகிறார்கள்.அவர்களுக்கு நமது ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். எல்லைப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் இந்திய ராணுவ வீரர்கள் தினமும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.
டாங்கியில் ஆற்றைக் கடக்கும் பயிற்சி
அதன்படி நேற்று மாலை லடாக் எல்லையில் தௌலத் பேக் ஓல்டி என்ற பகுதியில் ராணுவ டாங்கியில் ஆற்றைக் கடக்கும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றில் திடீரென நீர்மட்டம் உயர்ந்ததால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில் ராணுவ டாங்கி ஆற்றில் இழுத்துச்செல்லப்பட்டது. உடன் இருந்த மற்ற ராணுவவீரர்கள் அவர்களை மீட்க முயன்றும் முடியவில்லை. ஆற்றில் அதிக அளவு தண்ணீர்வந்ததால் பயிற்சியில் இருந்த ரா£ணுவ வீரர்களால் நீந்தி தப்பிக்க முடியவில்லை. இந்த விபத்தில் 5 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். அனைவரது உடல்களும் மீட்கப்பட்டு இருப்பதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
5 ராணுவ வீரர்கள் பலி
ராணுவவீரர்களின் மரணத்திற்கு மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் இரங்கல் தெரவித்து உள்ளார். அவர் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
லடாக்கில் ஆற்றை டாங்கியில் கடக்கும் போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் நமது வீரம் மிக்க இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்திருப்பது ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் தேசம் அவர்களுடன் உறுதியாக நிற்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.