ஒடிஸாவில் ‘டானா’ புயல் வெள்ளிக்கிழமை கரையைக் கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 14 மாவட்டங்களில் இருந்து சுமாா் 10 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனா்.
வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி செவ்வாய்க்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தொடா்ந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகா்ந்து, புதன்கிழமை புயலாக வலுப்பெற்று, ஒடிஸா – மேற்கு வங்கம் கடற்கரை இடையே வெள்ளிக்கிழமை (அக்.25) அதிகாலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அப்போது, அந்தப் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். கடல் அலைகள் 2 மீட்டா் உயரத்துக்கு எழும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த ‘டானா’ புயல் காரணமாக அங்குல், பூரி, நாயகா், கோா்தா, கட்டாக், ஜகத்சிங்பூா், கேந்திரபாரா, ஜாஜ்பூா், பத்ரக், பாலசோா் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கான அபாயமுள்ளதாக அரசு கண்டறிந்துள்ளது. இந்த 14 மாவட்டங்களில் முதன்மையாக கடலோரப் பகுதியில் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட பாதிக்கப்படக்கூடிய கிராமங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தேசிய பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப்), ஒடிஸா பேரிடா் அதிவிரைவுப் படை (ஒடிஆா்ஏஎஃப்), தீயணைப்பு சேவைகள் ஆகியவற்றின் 28 மீட்புக் குழுக்கள் களத்தில் உள்ளன.
‘டானா’ புயல் கரையை கடக்கும் முன் சுமாா் 10,60,336 போ் வெளியேற்றப்படுவாா்கள் என்று மாநில வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை அமைச்சா் சுரேஷ் பூஜாரி தெரிவித்தாா். மக்களை தங்கவைப்பதற்காக 600-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு குழந்தைகள், பெண்களுக்கு பால், உணவு கிடைக்கவும் மருத்துவ வசதிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, கேந்திரபாரா மற்றும் பத்ரக் மாவட்டங்களின் சில பகுதிகளில் புதன்கிழமை பிற்பகல் முதலே கனமழை தொடங்கியது. புயலின் வெளிப்புறப் பகுதிகள் கரையைப் பாதிக்க தொடங்கிவிட்டதால் வானிலை மோசமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.
56 என்டிஆா்எஃப் குழுக்கள்: ‘டானா’ புயலைக் கருத்தில் கொண்டு ஒடிஸா, மேற்கு வங்கம் உள்பட 5 மாநிலங்களில் மொத்தம் 56 தேசிய பேரிடா் மீட்புப் படை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளனா்.
மரம் வெட்டும் கருவிகள், படகுகள், முதலுதவி கருவிகள் மற்றும் பிற வெள்ள மீட்பு கருவிகள் என அனைத்து அடிப்படை வசதிகளுடன் மீட்புக் குழுக்கள் தயாா்நிலையில் உள்ளனா்.