ஓஹோ….. ‘உங்க அக்காவுக்கு கால் பண்ணு’ என்று சொன்னதன் பின்னணி இதுதானா என்று புரிந்து, மீண்டும் அவங்களுக்கு கால் செயதவுடனே,
“என்ன வாங்கி முடிச்சிட்டியா?? நான் மட்டும் திட்டு வாங்கினா எப்படி?”
என்று சொல்லி ஒரே சிரிப்பு. சந்தோஷமா திட்டு வாங்குறதுங்கறது இதுதான். ஆனால் அன்று என் அக்கா பயந்தது போல எந்த ஒரு கசப்பான அனுபவமும் ஏற்படவில்லை.
பின், அடுத்த அண்ணனுக்கு அழைத்து
“படம் பாத்திட்டியா” என்று கேட்க
“இல்லப்பா.. நைட் ஷோ தான் போறேன்” என்று சோகமாக சொன்னது.
“என்னாது……. படம் பாக்கலையா?? ஹா ஹா ஹா.. ரஜினி ரசிகருக்கு வந்த சோதனை…. ஆனா நான் பாத்துட்டேனே”
“அடப்பாவி.. எப்படி?? எங்கள மட்டும் அப்படி திட்டுனீங்க” என்று தொடங்கி என் தங்கை சொன்ன அதே விதத்தில்… திட்டி முடித்தவுடன்,
“எப்படியோ உனக்கு முன்னாடி நான் பாத்துட்டனே” என்று சொல்லி அதை வம்பு இழுத்தது, என்று அந்த நாளின் நினைவுகள் மறக்க முடியாத சந்தோஷங்கள்.
பெரிய அண்ணன் அங்கு துறையூரில் மற்றவர்களிடமும் இதை சொல்லி, பேப்பரில் வந்த விஷயத்தையும் சொல்ல, அதில் வேறு ஒரு பஞ்சாயத்தாகிவிட்டது. அடுத்த சில தினங்களில் என் பெரியம்மாவை சந்தித்தபோது,
“நீ என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னியா? தெரு சனமே எங்கிட்ட வந்து கேக்குது.. ஆனா எனக்குத் தெரியவேயில்ல.. ஒரு ஃபோன் பண்ணுனியா நீ படம் பார்த்தேன்னு?”
“அது பெரிம்மா… நான் ரஜினி ரசிகர்களுக்கு மட்டும்தான் கால் பண்ணினேன்” என்று சமாளித்ததெல்லாம் சந்தோஷ நினைவுகள்.
“கபாலி”, “காலா”, “எந்திரன் 2.0”, “ஜெயிலர்” போன்ற படங்களையும் முதல் காட்சி பார்த்தேன். ஒரு மாற்றம்.. இந்த படங்களுக்கு, என் மாமாப்பெண், அண்ணன் பெண், மாமாப்பையன்(தீவிர ரஜினி ரசிகர்), அவர் மனைவி என்று கூட்டமாக செல்லும் அளவிற்கு வந்து விட்டோம். ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும்.. இப்போதெல்லாம் திரையரங்குகள் சில கண்டிப்பான விதிமுறைகளை பின்பற்றி (மது, புகையிலை, சிகரெட் தவிர்ப்பதை சோதனை செய்து அனுமதி அளிப்பது) பாதுகாப்பாக இருப்பதாலேயே பெண்களாலும் முதல் காட்சிக்கு செல்ல முடிகிறது.