பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இதற்கு முன்பு நடித்த டான் படம் பெரிய அளவில் ஹிட்டானது. டான் 2 படமும் வெளிவந்துவிட்டது. இப்போது டான் 3 படத்தை இயக்க இயக்குநர் பர்ஹான் அக்தர் திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் மீண்டும் நடிக்க ஷாருக் கான் மறுத்துவிட்டார். இதையடுத்து நடிகர் ரன்வீர் சிங் இப்படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது டான் 3 படத்தில் இருந்து ரன்வீர் சிங்கும் விலகிக்கொண்டார். நடிகர் ரன்வீர் சிங் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லீ போன்ற திரைப்பட இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளார். அவர் தொடர்ச்சியாக கேங்ஸ்டர் படங்களில் நடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டார். குறிப்பாக துரந்தர் படம் கேங்க்ஸ்டர் படமாக அமைந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.
எனவே அது போன்ற ஒரு படத்தில் மீண்டும் நடிப்பதில்லை என்று ரன்வீர் சிங் இந்த முடிவை எடுத்துள்ளார். இதனால் இயக்குநர் பர்ஹான் அக்தர் மீண்டும் ஷாருக் கானிடம் சென்று டான் 3 படத்தில் நடிக்கும்படி கேட்டுக்கொண்டார். கதையை கேட்ட ஷாருக் கான் அப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஆனால் அப்படத்தில் நடிக்க ஷாருக் கான் புதிய நிபந்தனை ஒன்றை விதித்து இருக்கிறார். இயக்குநர் குழுவில் இயக்குநர் அட்லீயை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனை கேட்டு பர்ஹான் அக்தர் அதிர்ச்சியடைந்துள்ளார். தனது சொந்த இயக்கம் மற்றும் தயாரிப்பில் டான் 3 படத்தை எடுக்க திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் ஷாருக் கான் விதித்துள்ள நிபந்தனையால் தனது அங்கீகாரம் குறையும் என்று பர்ஹான் அக்தர் நினைக்கிறார். அதேசமயம் அட்லீயை இதில் சேர்த்துக்கொண்டால் மட்டுமே தன்னால் இப்படத்தில் நடிக்க முடியும் என்று ஷாருக் கான் திட்டவட்டமாக கூறிவிட்டாராம். ஜவான் படத்தை இயக்குநர் அட்லீ இயக்கினார். அப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. டான் 3 படத்தில் இயக்குநர் அட்லீயை சேர்ப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று பர்ஹான் அக்தர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவிடமும் அணுகினர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்க கியாரா அத்வானியை ஒப்பந்தம் செய்தனர். ஆனால் அவரும் அப்படத்தில் இருந்து விலகிவிட்டார்.