ஐதராபாத் பிரியானி என்றாலே மிகவும் பிரபலம். நாட்டின் பெரும்பாலான இடங்களில் ஐதராபாத் பிரியானி என்ற பெயரில் அதிக அளவில் பிரியானி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல பிரியானி உணவகங்கள் கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் வரி ஏய்ப்புகளில் ஈடுபட்டு வந்துள்ளதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பிரியானி உணவகத்திற்கு ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற நாடு முழுவதும் கிளைகள் இருக்கிறது.
இந்நிறுவனம் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வந்த தகவலை தொடர்ந்து வருமான வரித்துறை 3 பிரபல பிரியானி பிராண்ட் உணவகங்களுக்கு சொந்தமான 30 இடங்களில் ரெய்டு நடத்தியது.
இந்த ரெய்டில் பிரியானி உணவகங்கள் பெரிய அளவில் வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான உணவகங்கள் பயன்படுத்தும் பில்லிங் மென்பொருளின் தரவுகளை, வருமான வரித்துறையின் ஐதராபாத் பிரிவு `செயற்கை நுண்ணறிவு மற்றும் பிக் டேட்டா” கருவிகள் மூலம் ஆய்வு செய்தது.

இதில் 2019 – 20 நிதியாண்டு உணவகங்கள் நாடு முழுவதும் சுமார் ரூ.70 ஆயிரம் கோடி விற்பனை வருவாயை மறைத்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது மொத்த விற்பனையில் 27% ஆகும். இந்தியா முழுவதும் இந்த மென்பொருள் மூலம் சுமார் ரூ.13,317 கோடி மதிப்பிலான பில்கள் கணக்கிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
வரி ஏய்ப்பு கண்டறியப்பட்ட முதல் 5 மாநிலங்களில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகியவை உள்ளன. கர்நாடகாவில் உள்ள உணவகங்கள் ரூ.2 ஆயிரம் கோடிக்கும், தெங்கானாவில் உள்ள உணவகங்கள் ரூ.1500 கோடிக்கும், தமிழ்நாட்டில் உள்ள உணவகங்கள் ரூ.1200 கோடிக்கும் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.