“டாஸ்மாக் ஊழலை மறைக்க முதல்வர் ஸ்டாலின் மாநில சுயாட்சி நாடகம்” – நயினார் நாகேந்திரன் விமர்சனம் | CM Stalin state autonomy drama to cover up TASMAC drama – Nainar Nagendran

1358335.jpg
Spread the love

கோவில்பட்டி: “டாஸ்மாக்கில் மிகப் பெரிய மோசமான ஊழல் நடந்துள்ளது. மக்கள் இதை மறக்க வேண்டும் என்பதற்காகத்தான் மாநில சுயாட்சி உள்ளிட்ட நாடகங்களை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருகிறார்” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கம் 255-வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள வீரன் சுந்தரலிங்கனார் சிலைக்கு இன்று (ஏப்.16) பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நயினார் நாகேந்திரன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “தேசத்தின் நலன் காத்தவர்களையும், தேசத்துக்காக உயிர் நீத்த தியாகி செம்மல்களையும் கவுரவப்படுத்துவது பாஜகவும், பிரதமர் மோடியும்தான். ராமேசுவரத்துக்கு பிரதமர் வந்தபோது எனக்கு வரும் கடிதங்களில் கையெழுத்துகள் ஆங்கிலத்தில் உள்ளது என தெரிவித்திருந்தார். அதன் விளைவாக இன்று அனைத்தும் தமிழில் வரும் என்று சொல்லி உள்ளனர்.

மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படக் கூடாது என்பதில் எங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால், மாநில சுயாட்சி என்று வரும்போது அது பிரிவினைவாதத்தை தூண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றுதான் அம்பேத்கர் கூறியுள்ளார். நிர்வாக வசதிக்காகத்தான் மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அம்பேத்கர் கூறியதை செய்தாலே போதும். மாநில சுயாட்சி என்பது தேவையில்லை.

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை என்று தான் நாங்கள் கூறுகிறோம். மக்களுக்கு காவல் துறையைப் பார்த்து பயமில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் காவல் துறையினர் உடனே நடவடிக்கை எடுத்தனர். ஆனால் இப்போது நடவடிக்கை எடுக்க காவல் துறை தயங்குகிறது. அது மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் போதைப்பொருட்கள் புழக்கத்தில் உள்ளன. டாஸ்மாக்கில் மிகப் பெரிய மோசமான ஊழல் நடந்துள்ளது. மக்கள் இதை மறக்க வேண்டும் என்பதற்காகத்தான், மாநில சுயாட்சி உள்ளிட்ட நாடகங்களை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருகிறார்” என்று அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *