தஞ்சாவூர்: தீபாவளி விற்பனை இலக்கை எட்ட டாஸ்மாக்கில் காட்டிய அக்கறையை நெல் கொள்முதலில் தமிழக அரசு காட்டவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
தஞ்சாவூர் அருகேயுள்ள ஆலக்குடி நெல் கொள்முதல் நிலையத்தை நேற்று பார்வையிட்ட நயினார் நாகேந்திரன், அங்கிருந்த விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டு 6.30 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டைவிட அதிகம் என்பது கடந்த ஜூன் மாதமே முதல்வர் கவனத்துக்குச் சென்றது. நெல் கொள்முதலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்துவிட்டோம் என முதல்வர் கூறினார். ஆனால், எந்த முன்னேற்பாட்டையும் செய்யவில்லை. இதனால், ஒவ்வொரு கொள்முதல்நிலையத்திலும் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
ஆனால், கொள்முதல் தாமதத்துக்கு செறிவூட்டப்பட்ட அரிசிதான் காரணம் என மத்திய அரசு மீது தமிழக உணவுத் துறை அமைச்சர் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். தேவையான நேரத்தில் கொள்முதல் நிலையங்களைத் திறக்காமல், உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் தாமதப்படுத்தியது தமிழக அரசுதான். தமிழகத்தில் நெல் கொள்முதலில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம். இதற்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆய்வு செய்த பிறகுதான், கொள்முதல் தாமதத்தால் நெல்மணிகள் முளைத்த விவரமே தமிழக அரசுக்கு தெரியவந்துள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ஆய்வுசெய்தார்.
ஆனால், மழையால் பாதிக்கப்பட்ட வயல்கள், கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளைப் பார்வையிடவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டிஉள்ளனர். தற்போதும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழையால் பயிர்கள் மூழ்கியுள்ளன. தமிழக அரசு தீபாவளிக்கு டாஸ்மாக்கில் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டது. டாஸ்மாக்கில் காட்டிய அக்கறையை நெல்கொள்முதலில் தமிழக அரசு காட்டவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.