நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 73 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. குளிர்பிரதேசம் என்பதால் மது விற்பனை அதிகமாக இருக்கும்.இங்கு தினசரி ரூ.1.5 கோடிக்கு மது விற்பனை நடப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஏப்ரல், மே மாதம் சீசன் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து மது விற்பனை ஜோராக நடைபெறும்.
மதுபாட்டில்களில் தண்ணீர்
இதனை பயன்படுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் சிலர் மதுபாட்டில்களில் தண்ணீர் உள்ளிட்டவற்றை கலந்து ஒருபாட்டிலில் உள்ள மதுவை 2 மற்றும் அதற்கு மேற்பட்ட பாட்டில்களில் பிரித்து விற்பதாக கடந்த சில நாட்களாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. மேலும் பணம் கொடுத்து வாங்கும் மது பிரியர்கள் போதை ஏறாமல் மதுக்கடை ஊழியர்களிடம் தகராறில் ஈடுபடும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறி வந்தன.
இதைத்தொடர்ந்து டாஸ்மாக் பறக்கும் படை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு மன்பு உதகை மணிக்கூண்டு பகுதியில் ஆய்வு செய்தனர். இதில் டாஸ்மாக் மதுவில் தண்ணீர் கலந்து விற்பனை செய்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து டாஸ்மாக்மதுக்கடையில் பணியாற்றி 2 மேற்பார்வையாளர்கள் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனாலும் மதுவில் தண்ணீர் கலந்து விற்பனை செய்வது நீடித்தது. இதேபோல் கூடுதல் கூடுதல் விலைக்கும் மது விற்பனை செய்யப்பட்டது.
மதுக்கடையில் ஆய்வு
இது குறித்த புகாரின் பேரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் உதகை ஸ்டேட் வங்கி எதிரில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை மற்றும் லோயர் பஜாரிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையில் ஆய்வு செய்தனர். இதில் மதுவில் தண்ணீர் கலந்து விற்பனை செய்ததும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து 4 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் மற்றும் 9 டாஸ்மாக் ஊழியர்கள் என மொத்தம் 13 பேரை பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் மேலாளர் கண்ணன் உத்தரவிட்டு உள்ளார்.
எச்சரிக்கை
மேலும், மாவட்டம் முழுவதும் பல கடைகளில் ஆய்வு பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளளர். டாஸ்மாக் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். தண்ணியிலேயே தண்ணீர் கலந்து காசு பார்க்கும் மதுக்கடை ஊழியர்களை நினைத்து மதுப்பிரியர்கள் வேதனை அடைந்து உள்ளனர்.
இதையும் படியுங்கள்: அருணாசலபிரதேசத்தில் பா.ஜனதா அமோக வெற்றி