டிஎன்பிஎஸ்சி குரூப் 4: விளையாட்டு வீரர்கள் சான்றிதழ்களை பதிவேற்ற நவ.14 வரை வாய்ப்பு | TNPSC Gives Final Opportunity to 690 Athletes to Upload Certificates”

Spread the love

சென்னை: குரூப்-4 தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் பெற்றும் 690 விளையாட்டு வீரர்கள் இன்னும் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவில்லை. இதனால், அவர்களின் அரசு பணி வாய்ப்பு பறிபோகக்கூடி சூழலில் அவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி கடைசியாக ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபர் 22-ம் தேதி வெளியிடப்பட்டன. அதில் விளையாட்டு வீரர்கள் பிரிவின் கீழ் இடஒதுக்கீடு கோரியவர்களில் 1280 பேர் தேர்ச்சி மதிப்பெண் பெற்றுள்ளனர்.

அவர்கள் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்ததற்காக சான்றிதழ்களை உரிய படிவத்தில் பெற்று தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய நவம்பர் 5 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்களில் 590 பேர் மட்டுமே சான்றிதழ்கள் மற்றும் விளையாட்டு போட்டி படிவங்களை பதிவேற்றம் செய்திருப்பதும் எஞ்சிய 690 பேர் எவ்வித ஆவணங்களையும் பதிவேற்றம் செய்யாததும் தற்போது தெரிய வருகிறது.

அதோடு விளையாட்டு போட்டி தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்தவர்களும் தங்கள் சான்றிதழ்களை மட்டுமே பதிவேற்றம் செய்திருக்கிறார்கள்.உரிய படிவத்தில் பெறப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்யவில்லை. இவை மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படாது. விளையாட்டு வீரர்கள் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் சங்கத்திடமிருந்த பெறப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் படிவங்களை பதிவேற்றம் செய்வதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

சான்றிதழ் ஆவணங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தேவையான கையெழுத்து பெறப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் சான்றிதழ்களும், படிவங்களும் மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படாது. விளையாட்டு வீரர்கள் பிரிவின் கீழ் ஒதுக்கீடு கோரி தேர்ச்சி மதிப்பெண் எடுத்துள்ள விண்ணப்பதாரர்கள் உரிய வகையில் பெறப்பட்ட விளையாட்டு சான்றிதழ்கள் மற்றும் படிவங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய கடைசியாக ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

அவர்கள் நவம்பர் 14-ம் தேதிக்குள் தேவையான சான்றிதழ்கள் மற்றும் படிவங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் விண்ணப்பம் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு பிரிவில் பரிசீலிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *