சென்னை: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பதவிகளுக்கான தேர்வுகளில் காலியிடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதால் டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான (டிப்ளமா மற்றும் ஐடிஐ கல்வித்தகுதி) அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி 13-ம் தேதி வெளியிட்டது. இதில் உதவி வேதியியலர், உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து), திட்ட உதவியாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2 ), வரைவாளர் (கிரேடு-3), விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர், இளநிலை வரைவு அலுவலர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், சிறப்பு மேற்பார்வையாளர், சர்வேயர், உதவி வேளாண் அலுவலர், மேற்பார்வையாளர் (நெசவு), ஆவின் நிர்வாகி (ஆய்வகம்), ஏசி டெக்னீசியன் என பல்வேறு விதமான பதவிகளில் 861 காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன. சில வகை பதவிகளுக்கு பொறியியல் டிப்ளமாவும், சில பணிகளுக்கு ஐடிஐ-யும் கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு செப்டம்பர் 11-ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில், தற்போது டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள 2024-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு அட்டவணையில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வில் (டிப்ளமா, ஐடிஐ கல்வித்தகுதி) காலியிடங்களின் எண்ணிக்கை 730 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எண்ணிக்கை குறைக்கப்பட்ட பதவிகளின் விவரம் குறிப்பிடப்படவில்லை.
அதேபோல், கடந்த ஜூலை 26-ம் தேதி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பதவிகள் தேர்வுக்கான (பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்பு கல்வித்தகுதி) அறிவிப்பில் 654 காலியிடங்கள் இடம்பெற்றிருந்தநிலையில், தற்போது அக்காலியிடங்களின் எண்ணிக்கை 605 ஆக குறைக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பதவிகளில் காலியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடப்படவில்லை.
இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு வருகிற 24-ம் தேதி முடிவடைகிறது. இரு தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வுகளிலும் காலியிடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதால் டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காலியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்கு உள்பட்ட என்ற போதிலும் பொதுவாக காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதே வழக்கம். ஆனால், அதற்கு நேர்மாறாக தற்போது காலியிடங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது அவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையே, திருத்தப்பட்ட வருடந்திர தேர்வு அட்டவணையில் புதிய தேர்வுக்கான அறிவிப்பு ஒன்றும் இடம் பெற்றிருக்கிறது. 50 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு (பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு கல்வித்தகுதியுடன் நேர்காணல் உள்ள பதவிகள்) ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியிடப்பட்டு அதற்கான போட்டித்தேர்வு நவம்பர் 18-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், என்னென்ன பதவிகள் என்ற விவரம் அதில் குறிப்பிடப்படவில்லை. எனினும், ஏற்கெனவே வெளியிடப்பட்ட வருடந்திர தேர்வு அட்டவணையில் இடம்பெற்று பின்னர் நீக்கப்பட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தேர்வு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்ட தேர்வுகள் புதிய அறிவிப்பில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.