சென்னை: டிஎன்பிஎஸ்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர், தேர்வுகள் நேர்மையாக நடத்தப்படும் என உறுதி அளித்தார்.தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். நீண்டகாலமாக டிஎன்பிஎஸ்சி-க்கு தலைவர் இல்லாது இருந்துவந்த நிலையில், அதன் மூத்த உறுப்பினரான முனியநாதன் பொறுப்பு தலைவராகப் பணியாற்றி வந்தார்.
இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு மூத்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ்மற்றும் உறுப்பினர்கள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் எஸ்.கே.பிரபாகர் கூறியதாவது: தமிழக அரசு பணியில் சேர வேண்டும் என்ற கனவோடு டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை ஏராளமானோர் எழுதி வருகிறார்கள். தேர்வுகள் நேர்மையாக நடத்தப்படும் எனஉறுதியளிக்கிறேன். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுடன் மற்ற தேர்வு வாரியங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளையும் மாணவர்கள் எழுதுகிறார்கள். இரு தேர்வு தேதிகளும் ஒரே நாளில்இல்லாதவாறு பார்த்துக் கொள்ளப்படும்.
தேர்வுக்கும், தேர்வு முடிவுகளுக்கும் இருக்கும் இடைவெளியை குறைக்க நடவடிக்கை எடுப்போம்.காலதாமதத்தை குறைப்பதுதான் எங்களின் முதல் பணி. ஒவ்வொரு தேர்வுக்கும் ஒவ்வொரு ஆண்டும்குறிப்பிட்ட நாட்களில் தேர்வு எழுதும் நடைமுறை கொண்டுவரப்படும். தேர்வுகள் குறிப்பிட்ட கால அட்டவணைகளில் நடப்பதற்கும், விரைவில் முடிவுகளை வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும். டிஎன்பிஎஸ்சி பெரிய அளவிலான புகார்கள் இல்லாமல் தரமான முறையில் அரசு தேர்வுகளை நடத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தேர்வர்கள் எதிர்பார்ப்பு: யுபிஎஸ்சி-யைப் போல் டிஎன்பிஎஸ்சியும் வருடாந்திர தேர்வு அட்டவணையை முறையாகப் பின்பற்றி குறித்த காலத்தில் தேர்வுகளை நடத்தி, தேர்வு முடிவுகளையும் குறித்த காலத்துக்குள் வெளியிட வேண்டும். அதேபோல், குறைவான பணியிடங்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் தேர்வுகளின் முடிவுகளை வெகுவிரைவில் வெளியிட வேண்டும் என்று புதிய தலைவரிடம்எதிர்பார்ப்பதாக, டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதத் தயாராகி வரும் தேர்வர்கள் தெரிவித்தனர்.