தமிழ்நாடு, புதுச்சேரியில் டிசம்பரில் கூடுதல் மழைப்பொழிவுக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
டிசம்பர் மாதத்துக்கான வானிலை முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை(டிச. 2) வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திர பிரதேசம், யாணம், ராயல்சீமா, கேரளம், மாஹே, தெற்கு கர்நாடகத்தின் உள்புறப் பகுதிகள் ஆகிய 5 வானிலை ஆய்வு மண்டலங்களை உள்ளடக்கிய தென் தீபகற்ப இந்தியாவில், நிகழாண்டு டிசம்பர் மாதம், மாதந்திர சராசரி மழைப்பொழிவு இயல்பான அளவைவிட அதிகளவில் இருக்கும். இந்த காலகட்டத்தின் இயல்பான மழைப்பொழிவு அளவில் 131 சதவிகிதம் அதிக மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம்.
இந்தியாவை பொறுத்தவரையில், இது இந்த காலகட்டத்தின் இயல்பான மழைப்பொழிவு அளவில் 121 சதவிகிதம் கூடுதலாக இருக்கும். அதிலும் குறிப்பாக, மேற்கு-மத்தியப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், கிழக்கு-மத்தியப் பகுதிகள், வடகிழக்கு பகுதிகளில் சில இடங்களிலும் அதிக மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம்.
மறுபுறம், வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், கிழக்கு-மத்தியப் பகுதிகள், வடகிழக்கு பகுதிகளில் அநேக இடங்களிலும் இயல்பான அளவைவிட குறைவான மழைப்பொழிவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.