மகாராஷ்டிர அரசின் அமைச்சரவை விரிவாக்கம் டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
நாக்பூரில் நடைபெறும் விழாவில் சுமார் 30 புதிய அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர் பிடிஐயிடம் தெரிவித்தார்.
மகாராஷ்டிர அமைச்சர்கள் குழுவில் முதல்வருடன் சோ்த்து மொத்தம் 43 அமைச்சா்கள் வரை இடம் பெற முடியும். இதில் பாஜகவுக்கு 22, சிவசேனைக்கு 12, தேசியவாத காங்கிரஸுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
288 உறுப்பினா்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு கடந்த நவம்பரில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில், பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணி 230 இடங்களுடன் அமோக வெற்றி பெற்றது.
இக்கூட்டணியில் பாஜக 132, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 57, அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களைக் கைப்பற்றின. எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது.