டிச.16-ல் தமிழகம் முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல்: பி.ஆர்.பாண்டியன், பி.அய்யாக்கண்ணு கூட்டாக அறிவிப்பு | Farmers to block trains across Tamil Nadu on Dec. 16 says pr pandian

1342495.jpg
Spread the love

திருச்சி: “மத்திய அரசின் விவசாய விரோத கொள்கைகளை கண்டித்தும், டல்லேவால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தியும், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம், கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுமையிலும் டிசம்பர் 16-ம் தேதி மாபெரும் ரயில் மறியல் போராட்டத்தை நடத்த உள்ளோம்” என திருச்சியில் பி.ஆர்.பாண்டியன் மற்றும் பி.அய்யாகண்ணு ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பி.அய்யாகண்ணு, மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் திருச்சியில் கூட்டாக இன்று (டிச.7) மாலை செய்தியாளர்களிடம் கூறியது: “மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர மறுக்கிறது. கடன் தள்ளுபடி செய்ய மறுக்கும் மோடி அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.24 லட்சம் கோடி வரையிலும் கடன்களை தள்ளுபடி செய்து உள்ளது.

கடன்களை திருப்பி செலுத்த முடியாத விவசாயிகளின் சொத்துக்கள் அபகரிக்கும் நடவடிக்கையில் விற்பனை முகாம்களை நடத்துகிறது. விவசாயிகளை போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அழைத்துப் பேச மறுக்கிறது. கடந்த நவ.26-ம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு இருக்கிற விவசாயிகள் சங்க தலைவர் ஜெக்ஜித்சிங் டல்லே வால் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முன்வரவில்லை. இதனால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று (டிச.6) சம்பு பார்டரில் இருந்து டெல்லி பேரணி புறப்பட்ட விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சுகள் மற்றும் துப்பாக்கி சூடு மூலம் விவசாயிகள் பேரணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இச்செயல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. விவசாயிகளின் நியாயமான போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மறுக்கும் மத்திய அரசாங்கம் உச்ச நீதிமன்ற நீதியரசர் நவாப் சிங் தலைமையிலான குழு நவ.22-ம் தேதி செய்த பரிந்துரையை ஏற்க மறுக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே மதிக்க மத்திய அரசு முன்வரவில்லை.

இந்நிலையில், தமிழ்நாட்டில் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டம் என்கிற பெயரில் மோடிக்கு அண்ணனாக திமுக அரசு செயல்படுகிறது. விவசாயிகள் விளை நிலங்கள், நீர்நிலைகளை ஒப்பந்தம் போடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சொந்தமாக்கி கொள்ள இச்சட்டம் வழிவகுக்கிறது. நிலம் தர மறுக்கும் விவசாயிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் நடவடிக்கை மேற்கொள்கிறது.

விவசாயிகள் போராட்டத்தை தனதாக்கிக் கொண்டு ஆட்சிக்கு வருகிற அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளை கொடுமைப்படுத்த முயற்ச்சிக்கிறது. எனவே மத்திய அரசின் விவசாய விரோத கொள்கைகளை கண்டித்தும் டல்லேவால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தியும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம், கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு முழுமையிலும் டிச.16-ம் தேதி மாபெரும் ரயில் மறியல் போராட்டத்தை நடத்த உள்ளோம்.

திருச்சியில் அய்யாக்கண்ணு, தஞ்சாவூரில் பி.ஆர்.பாண்டியன், மதுரையில், பொன் இராஜேந்திரன், காரைக்காலில் எல்.ஆதிமூலம், திருப்பூரில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் ராசு, கோவையில் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க தலைவர் ஏ.எஸ்.பாபு, சேலத்தில் தங்கராஜ், சென்னையில் துரைசாமி, நெல்லையில் புளியரை செலத்துரை, நாமக்கலில் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட தலைவர்கள் அனைத்து மாவட்டங்களில் நடைபெறும் போராட்டங்களிலும் பங்கேற்க உள்ளனர். விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ரயில் மறியலில் ஈடுபடுவார்கள்” என்றனர்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் எம்.செந்தில்குமார், மாநில இளைஞரணி செயலாளர் ஒக்கநாடு மகேஸ்வரன், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர்கள் பாலசுப்ரமணியன், தங்கமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *