(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல – ஆசிரியர்)
ரஷ்ய அதிபர் புடினின் இரு நாள் இந்திய விஜயம் இந்திய ரஷ்ய உறவுகள் , அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அழுத்தத்தால் முக்கியமான “சோதனைக் கட்டத்தில்” இருக்கும் சூழலில் வருகிறது.
வரும் டிசம்பர் 4 மற்றும் 5ம் தேதிகளில் நடக்கவிருக்கும் புடினின் வருகை , இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் அழைப்பின் பேரில் நிகழும் ஒரு அரசுமுறை விஜயம்.
இது இந்திய ரஷ்யத் தலைவர்களுக்கிடையே ஆண்டுக்கொருமுறை நடக்கும் வழக்கமான சந்திப்புதான். இது இரு நாட்டுத் தலைவர்களிடையே நடக்கும் 23வது உச்சி மாநாடு. ஆனால் இந்த சந்திப்பு நிகழும் சர்வதேச அரசியல் தட்பவெப்ப நிலை காரணமாக இது முக்கியத்துவம் பெறுகிறது.
இரு நாடுகளுக்கிடையே வர்த்தக மற்றும் பாதுகாப்பு உறவுகள் முக்கியமானவை.
இந்திய ரஷ்ய நட்பு – புடின் இந்தியா வருகை
சோவியத் ஒன்றிய காலத்திலிருந்தே இந்திய ரஷ்ய நட்பு என்பது பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியது. சோவியத் ஒன்றியம் உடைந்து, பனிப்போர் முடிந்த பின்னும் இந்திய ரஷ்ய உறவுகள் பலமாகவே இருந்து வந்துள்ளன.
புடின் அதிபரான பின்னும் இந்த சூழல் தொடர்கிறது.
புடின் கடந்த 2021ல் இந்தியாவுக்கு வந்த ஒரு சில மாதங்களுக்குப் பின் உக்ரெயின் மீது தாக்குதலைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022ல் ரஷ்யா உக்ரெயின் மீது தொடுத்த போரை அடுத்து சர்வதேச அளவில் அது தனிமைப்பட்டு விட்டதாக ஒரு தோற்றம் நிலவினாலும், அவ்வாறு தனிமைப்படுத்தவிடவில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் இது போன்ற முக்கிய விஜயங்கள் புடினுக்கு தேவைப்படுகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை, அது அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நெருக்கடியையும் மீறி தன் கேந்திர அரசியல் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்காத நிலையைக் காட்ட இந்த சந்திப்பு உதவும் என்ற கருத்து நிலவுகிறது.

புடினின் இந்தப் பயணம், உக்ரெயின் போரை அடுத்து மேற்குலகின் பொருளாதார தடைகளை எதிர்கொண்ட ரஷ்யாவிடம் தொடர்ந்து மலிவு விலை எண்ணெய் வாங்கிய காரணத்திற்காக இந்தியா அமெரிக்க அதிபர் டிரம்ப்பால் 25% அதிக இறக்குமதி வரி விதிக்கப்பட்ட சூழலில் வருகிறது.
இந்திய-ரஷ்ய எண்ணெய் வர்த்தகம்
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ரஷ்யா விமர்சித்திருந்தது. கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக ரஷ்ய எண்ணெயை மற்றும் எரி வாயுவை வாங்கும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் பெரிய வாடிக்கையாளர்கள் என்ற நிலையில் டிரம்ப்பின் இந்த முடிவு இந்திய-ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தைப் பாதித்துள்ளது.
தடைகள் வரும் டிசம்பரிலிருந்து கடுமையாகும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் சூழலில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைக்குறைத்து வருவதுடன், அமெரிக்காவிடமிருந்து கடந்த சில மாதங்களாக எண்ணெய் வாங்கத் தொடங்கியிருக்கின்றன.