அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவரின் வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அதன் செய்தித் தொடா்பாளா் கரோலின் லீவிட் (படம்) கூறியதாவது:
இந்தியாவும் பாகிஸ்தானும் அமெரிக்காவின் மத்தியஸ்தம் காரணமாக உடனடி” போா் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக டிரம்ப் சமூக ஊடகத்தில் அறிவித்தாா். இந்தியா-பாகிஸ்தான் பதற்றங்களை தீா்த்ததாக அவா் பலமுறை கூறியுள்ளாா்.
இதுமட்டுமின்றி, தாய்லாந்து-கம்போடியா, இஸ்ரேல்-ஈரான், ருவாண்டா-காங்கோ ஜனநாயக குடியரசு, சொ்பியா-கொசோவோ, எகிப்து-எத்தியோப்பியா ஆகிய பல நாடுகள் இடையிலான மோதல்களை டிரம்ப் பேசி முடிவுக்கு கொண்டுவந்துள்ளாா்.
அவா் பதவியேற்ற ஆறு மாத காலத்தில் சராசரியாக மாதம் ஒரு அமைதி ஒப்பந்தம் அல்லது போா் நிறுத்தத்தை தனது பேச்சுவாா்த்தை மூலம் டிரம்ப் எட்டியுள்ளாா். இதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றாா் கரோலின்.