உக்ரைன் போரை நிறுத்தினால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நோபல் வழங்க பரிந்துரைப்பதாக ஹிலாரி கிளிண்டன் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷியா – உக்ரைன் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு நாடுகள் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன. போரை நிறுத்தும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைக்காக நீண்டகாலமாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும், அவர் ஒத்துழைக்கவில்லை.
இந்த நிலையில், டிரம்ப்பும் புதினும் தற்போது அலாஸ்காவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், முன்னர்வரையில் போர்நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தைதான் என்று கருதப்பட்ட நிலையில், இன்றைய பேச்சுவார்த்தையில் உக்ரைன் குறித்து எதுவும் பேசப்போவதில்லை என்று டிரம்ப் கூறியது குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்த குழப்பங்களுக்கிடையே, ரஷியா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வந்தால், நோபல் பரிசுக்கு டிரம்ப்பை பரிந்துரை செய்வேன் என்று ஹிலாரி கிளிண்டன் கூறியிருப்பது மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
2016 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு (குடியரசுக் கட்சி) எதிராகப் போட்டியிட்டவர் கிளிண்டன் (ஜனநாயகக் கட்சி). ஆனால், அவரே டிரம்ப்பின் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்வது என்பது வியக்கத்தக்கதுதான்.