பழமைவாத பேச்சாளராக அறியப்பட்டவரும், அமெரிக்காவின் இளம் தலைமுறையினரின் கூற்றுகளுக்கு எதிரான கொள்கைகளைத் தாங்கிப் பிடித்தவருமாக அறியப்படும் சார்லி கிர்க், குண்டு காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
கிர்க்கின் மரணச் செய்தி வெளியான நிலையில், அவரது மனைவி எரிகா கிர்க், கடந்த மாதம் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்த ஒரு தகவல் தற்போது மீண்டும் பகிரப்பட்டு வைரலாகி, பலரது கண்ணீருக்கும் காரணமாகியிருக்கிறது.
சார்லி கிர்க், அமெரிக்காவின் அரிசோனா மாகா முன்னாள் அழகி எரிகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர்.
இந்த நிலையில்தான், எரிகா தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் காதல் கதை என்ற தலைப்பில் ஒரு பதிவை கடந்த மாதம் வெளியிட்டிருந்தார். அதில், என்னுடைய காதல் கதையாக இருப்பதற்கு மிகவும் நன்றி என்று ஒரு விடியோவை பிப்ரவரி மாதம் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.
அந்த விடியோவில், சார்லி, குடும்பத்துடன் காரிலிருந்து இறங்கி வருகிறார். தனது மனைவிக்கு முத்தம் கொடுக்கிறார். தனது மகளை தூக்கிக் கொஞ்சுகிறார். அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். விடியோவின் இறுதியில், அவர்கள் நால்வரும் ஒன்றாகக் காட்சியளிக்கிறார்கள். அந்த புகைப்படம் எடுக்கும்போது, எரிகாவின் கையில் இருக்கும் மகனைப் பார்த்து நகைச்சுவையை ஏற்படுத்தும் நோக்கில் முகபாவனைகளை செய்வதும் பதிவாகியிருக்கிறது.
அந்த விடியோ, இன்று சார்லி கிர்க் மறைவையொட்டி பலரும் பகிர்ந்து தங்களது இரங்கலைப் பதிவு செய்து வருகிறார்கள். அவரது குடும்பத்துக்காக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதகாவும் பலரும் கருத்திட்டு வருகிறார்கள்.