புதிய வரி விதிப்பு உத்தரவில் கையெழுத்திட்ட டிரம்ப்
இந்நிலையில், ஆகஸ்ட் 7 முதல் அமலுக்கு வரும் வகையில் இந்தியா உள்பட 69 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் பிரதேசத்துக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய வரி விதிப்பு உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அதிகபட்சமாக இதுவரை இல்லாத அளவிற்கு சிரியாவுக்கு 41% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, லாவோஸ் மற்றும் மியான்மர் நாடுகளுக்கு 40% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து சுவிட்சர்லாந்துக்கு 39%, ஈராக் மற்றும் செர்பியாவுக்கு 35%, லிபியா, அல்ஜீரியாவுக்கு 30% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை போன்று வியாட்நாம் மற்றும் தைவான் நாடுகளுக்கு 20 முதல் 25 சதவிகிதம், பாகிஸ்தானுக்கு 19%, இஸ்ரேல், ஐஸ்லாந்து, நார்வே, பிஜி, கானா, கயானா மற்றும் ஈக்வடார் நாடுகளுக்கு 15% விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு அடுத்த வாரத்திற்குள் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்பின் 25 சதவிகித வரி விதிப்பால் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு?
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பொருள்கள் மீது விதித்துள்ள 25 சதவிகித வரி விதிப்பால் பல்வேறு துறைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டிரம்பின் 25 சதவிகித வரி விதிப்பால் வேளாண்மை, எண்ணெய், ஜவுளி, மின்னணுப் பொருள்கள், ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், ஏற்றுமதி பின்னடைவை சந்திக்கும்.
நகைகள், ரத்தினங்கள்: இந்திய நகைகள் மற்றும் ரத்தினங்களுக்கு அமெரிக்க சந்தையில் வரவேற்பு அதிகம். இந்த வரி விதிப்பு நடவடிக்கை இந்திய நகை மற்றும் நவரத்தின ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
எண்ணெய்: டிரம்ப் நடவடிக்கையால் ரஷியாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்க கூடிய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் தனியாருக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஆகியவையும் பாதிப்படையக் கூடும். ஒரு வேளை ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டால் மற்ற நாடுகளிடம் இருந்து அதிக விலைக்கு எண்ணெய் வாங்க வேண்டியதிருக்கும்.
மருந்து பொருள்கள்: ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து 8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான மருந்து பொருள்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், வரிவிலக்கில் உள்ள மருந்துப்பொருள்கள் தற்போதைய வரி விதிப்பு முறைக்குள் கொண்டுவரப்படும் பட்சத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகும்.
செல்போன்: அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆப்பிள் ஐபோன்களில் 44 சதவீதம் இந்தியாவில் இருந்துதான் அனுப்பப்படுகிறது. 25 சதவிகித வரிவிதிப்பால் ஐபோன் உற்பத்தி மையமாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கை கேள்விகுறியாக்கி இருப்பதுடன், ஆப்பிள் தன்னுடைய திட்டத்தையே மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், 25 சதவிகித வரி விதிப்பால் இந்தியாவின் செல்போன் உற்பத்தி துறைக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கூறப்படுகிறது.