சுனிதா வில்லியம்ஸை விண்வெளியில் இருந்து பூமிக்கு கொண்டுவந்து சேர்த்த விண்கலன் மூலம் டிராகன் படத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் தொழிலதிபர் எலான் மஸ்க்கும் புரமோஷன் செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் கேலியான பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.
டிராகன் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா, சுனிதா வில்லியம்ஸ் தரையிறங்கிய டிராகன் விண்கலன் விடியோவைப் பகிர்ந்ததால், சர்வதேச அளவில் புரமோஷன் பணிகள் நடந்துள்ளதாக ரசிகர்கள் பலர் வேடிக்கையாக பதிவிட்டு வருகின்றனர்.
சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரரான வில்மோா் உள்ளிட்ட 4 பேருடன் இன்று (மார்ச் 19) அதிகாலை 3.30 மணியளவில் டிராகன் விண்கலம் பூமிக்கு வந்து சேர்ந்தது.
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திற்குட்பட்ட கடலில் வெற்றிகரமாக வந்து விழுந்தது. அதிலிருந்து சுனிதா வில்லியம்ஸ், பட்ச் வில்மோர், நிக் ஹேக், அலெக்சாண்டர் கார்புனோவ் ஆகிய 4 பேரை நாசா பத்திரமாக மீட்டது. இந்த விடியோவை நாசா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
நாசாவின் இந்த முயற்சியை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து என்னவொரு நம்பமுடியாத அற்புதமான தருணம் எனப் பதிவிட்டுள்ளார்.
what an incredible moment https://t.co/C4qAyLwJRQ
— Archana Kalpathi (@archanakalpathi) March 19, 2025
அவரின் இந்தப் பதிவில் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். டிராகன் படத்தின் புரமோஷன் பணிகள் இன்னும் நிறைவடையவில்லையா? என்றும், புரமோஷன் பணிகளில் டிரம்ப்பையும், எலான் மஸ்க்கையும் ஈடுபடுத்தியுள்ளீர்களா? எனவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
லவ் டுடே படத்தின் வெற்றிக்குப் பிறகு ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரதீப் ரங்கநாதனுடன் மீண்டும் இணைந்து டிராகன் படத்தை தயாரித்தது. குறைந்த பட்ஜெட்டில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய இப்படம், 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | இந்தியர்கள் அதிகம் பயணிக்க விரும்பும் வெளிநாடு எது?