சென்னை: தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளுக்கு எப்படி தடை விதிக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில், தெரு நாய்களால் ஏற்படும் பிரச்சினை தொடர்பாக விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்ட பிறகு திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தெரு நாய்கள் கொல்லப்பட்டதாகவும், எனவே இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என தடை விதிக்கக் கோரியும் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரான பிரகாஷ் காந்த் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மேலும், சம்பந்தப்பட்ட தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நெறியாளர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது “தெரு நாய்கள் பிரச்சினை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க தெரு நாய்களுக்கு எதிராக உள்ளது. தெரு நாய்களுக்கு உணவளிப்பவர்களுக்கு எதிராகவும் வன்முறையைத் தூண்டும் வகையில் விவாதங்கள் நடத்தப்பட்டது” என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், ”தனியார் தொலைக்காட்சி நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் பொது மேடையில் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதுபோன்ற விவாத நிகழ்ச்சிகளுக்கு எப்படி தடை விதிக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பி விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.