சென்னை: அவதூறு வழக்கில் திமுக எம்பி டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை தரப்பில் 2 மணி நேரத்துக்கும் மேலாக குறுக்கு விசாரணை நடந்தது. ‘டிஎம்கே பைல்ஸ்’ என்ற பெயரில் தன் மீது கூறப்பட்ட புகார் தொடர்பாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக திமுக பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நடுவர் செந்தில்குமார் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டி.ஆர்.பாலுவும், அண்ணாமலையும் ஆஜராகியிருந்தனர். மனுதாரரான டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் குறுக்கு விசாரணை நடத்தினார்.
அப்போது வழக்கறிஞர் பால்கனகராஜ், அண்ணாமலை வெளியிட்ட சொத்து குறிப்புகள் அவதூறு கிடையாது. அவை அனைத்தும் மத்திய அரசின் தரவுகளில் இருந்தும், சமூக வலைதளங்களில் இருந்தும் எடுக்கப்பட்ட தொகுப்புகள், என்றார்.
அப்போது டிஆர்.பாலு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன், அண்ணாமலை தரப்பில் குறுக்கு விசாரணை மேற்கொள்ள ஆட்சேபம் தெரிவி்த்தார். மேலும் டி.ஆர்.பாலுவும், அண்ணாமலை முழுமையான அரசியல்வாதி இல்லை என்பதால் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்கக்கூடாது, என்றார். மேலும் காவல்துறையில் பணியாற்றிய அண்ணாமலைக்கு மட்டும் ரூ. 5 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரம் எங்கிருந்து வந்தது, என டி.ஆர்.பாலு கேட்டார்.
அதற்கு பால்கனகராஜ், தமிழக முதல்வர் ஸ்டாலினும் கூடத்தான் ரூ. ஒரு கோடிக்கு கைக்கடிகாரம் அணிந்துள்ளார், அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன. தனக்கு அந்த கைக்கடிகாரம் எப்படி வந்தது என்பதை அண்ணாமலையே பொது வெளியில் விளக்கியுள்ளார், என்றார்.
தொடர்ந்து வழக்கறிஞர் பால்கனகராஜ் எழுப்பிய பல கேள்விகளுக்கு டி.ஆர்.பாலு பதிலளிக்க மறுத்துவிட்டார். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக குறுக்கு விசாரணை நீடித்தது. பின்னர் விசாரணையை நீதிபதி வரும் நவ.11-க்கு தள்ளி வைத்துள்ளார். அன்றைய தினம் டி.ஆர். பாலுவை குறுக்கு விசாரணை செய்ய அண்ணாமலைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்ற நீதிபதி விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.