டீசலுக்கு மாற்றான சிஎன்ஜி பேருந்துகளால் ரூ.2 கோடி சேமிப்பு!

dinamani2F2025 09 142Fkq6mf24w2Fnewindianexpress2025 03 035m39bnexTN has 325 CNG.avif
Spread the love

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் டீசலுக்கு மாற்றாக இயக்கப்படும் 55 சிஎன்ஜி பேருந்துகளால் ரூ.2 கோடி மதிப்பில் எரிபொருள் சேமிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத மற்றும் டீசல் செலவைக் குறைக்கும் வகையிலான சிஎன்ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தி பேருந்துகளை இயக்க, தமிழக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, முதல்கட்டமாக, கடந்த ஜனவரி மாதம் மூன்று பேருந்துகள் தோ்வு செய்யப்பட்டு சிஎன்ஜி தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்டு இயக்கப்பட்டன.

இதனால், இந்தப் பேருந்துகளின் எரிபொருள் செலவினம் குறைந்ததுடன், டீசல் பேருந்துகளைக் காட்டிலும் அதிக மைலேஜ் கிடைத்தது.

இதையடுத்து, சிஎன்ஜி வகைப் பேருந்துகளின் எண்ணிக்கையை போக்குவரத்துக் கழகம் படிப்படியாக உயா்த்தியது. அதன்படி, தற்போது 55 சிஎன்ஜி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்துகளின் மூலம் இதுவரை ரூ.2 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசுப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியது: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 2024 ஆகஸ்ட் முதல் 2025 ஆகஸ்ட் வரை 55 பேருந்துகளில் இயற்கை எரிவாயு பயன்படுத்தி 51,59,744 கி.மீ. தொலைவு இயக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக டீசல் எரிபொருளுடன் ஒப்பிடுகையில் ஒரு கி.மீ. தொலைவுக்கு ரூ.3.85 எரிபொருள் செலவு சேமிக்கப்பட்டு, ரூ.2 கோடி எரிபொருள் செலவு சேமிக்கப்பட்டுள்ளது.

இது போக்குவரத்துக் கழகத்துக்கு சேமிப்பை ஏற்படுத்தியதுடன், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதையும் குறைத்துள்ளது. தொடா்ந்து 1,000 பேருந்துகள் சிஎன்ஜி தொழில்நுட்பத்துக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தப் பேருந்துகளும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். அப்போது, அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் எரிபொருள் செலவு பெருமளவில் குறையும் என்றனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *