குன்னூர்: நீலகிரி மலை ரயிலின் பர்னஸ் ஆயில் இன்ஜின், டீசல் இன்ஜின் ஆக மாற்றப்பட்டு, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு சோதனை ஓட்டம் நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற நீலகிரி மலை ரயிலில் பயணம் மேற்கொள்ள உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இத்தகைய சிறப்பு பெற்ற மலை ரயில் இன்ஜின்கள் இதுவரை பர்னஸ் ஆயில் மூலம் இயக்கப்பட்டு வந்தன. சுற்றுச்சூழல் மாசு அதிகம் ஏற்படுவதை தவிர்க்க இந்த இன்ஜின்கள் டீசல் இன்ஜின்களாக மாற்றப்பட்டன.
கடந்த ஆண்டு குன்னூரில் இருந்து திருச்சி பொன்மலை பணிமனைக்கு பராமரிப்புக்காக சென்ற பெட்டா குயின் என்று அழைக்கப்படும் இந்த இன்ஜின், டீசல் இன்ஜினாக மாற்றி வர்ணம் பூசி புதுப்பித்து தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்றது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை இயக்கப்பட்டு சோதனையில் பல்வேறு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. உரிய நேரத்தில் இந்த மலை ரயில் குன்னூர் வந்து சேர்ந்ததால் விரைவில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.