டீசல் பேருந்து கொள்முதல் டெண்டர் அவகாசம் நிறைவு; விரைவில் ஆணை: போக்குவரத்துத் துறை | Transport Department inform purchase of diesel buses 

1357168.jpg
Spread the love

சென்னை: அரசு போக்குவரத்துக் கழகத்தில் 1,614 டீசல் பேருந்து கொள்முதலுக்கான டெண்டருக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், அது நிறைவு பெற்றுள்ளது. ஒரு நிறுவனம் மட்டுமே டெண்டரில் பங்கேற்ற நிலையில், விரைவில் பரிசீலித்து ஆணை வழங்கவிருப்பதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு ஏற்ப கேஎப்டபிள்யூ என்னும் ஜெர்மன் வளர்ச்சி வங்கியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெறப்படும் நிதியுதவியில் குளிர்சாதன வசதியில்லா பிஎஸ் 6 வகையிலான 1,614 டீசல் பேருந்துகள் புதிதாக கொள்முதல் செய்யப்படவுள்ளன.

இதில், மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 245, விழுப்புரம் கோட்டத்துக்கு 347, சேலம், கும்பகோணம் கோட்டங்களுக்கு தலா 303, கோவை கோட்டத்துக்கு 115, மதுரை கோட்டத்துக்கு 251, நெல்லை கோட்டத்துக்கு 50 பேருந்துகள் வழங்கப்படவிருக்கின்றன. இது தொடர்பான டெண்டர் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி, டிச.2-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், டெண்டருக்கான அவகாசம் நிறைவடைந்தது.

இதில், அண்மை காலமாக அதிகளவு பேருந்துகளை போக்குவரத்துக் கழகத்துக்கு தயாரித்து வழங்கும் ஒரு நிறுவனம் மட்டுமே பங்கேற்றுள்ளது. தொடர்ந்து விண்ணப்பத்தை விரைவில் பரிசீலித்து ஆணை வழங்கவிருக்கிறோம். ஆணை வழங்கிய ஒரு மாதத்துக்குள் பேருந்துகளை வழங்கும் பணி தொடங்கிவிடும். மேலும், மாதத்துக்கு குறைந்தபட்சம் 300 பேருந்துகள் வரை பெறப்படும். அந்த வகையில் ஆண்டு இறுதிக்குள் அனைத்து பேருந்துகளும் பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *