கர்நாடகத்தில் டெங்கு பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கர்நாடக தலைநகர் பெங்களூரில் சனிக்கிழமை(ஜூலை 6) ஒரே நாளில் 115 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 45 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பாதிக்கப்பட்டோரில் 53 பேர், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்குவால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகம் முழுவதும் ஜூலை 6-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி இதுவரை 1.17 லட்சத்தும் அதிகமானோர் டெங்கு அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்றிருப்பதாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7000க்கும் அதிகமானோருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், சுமார் 4,500க்கும் அதிகமானோர் கூடுதலாக பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, கர்நாடகத்தில் ஸிகா வைரஸ் பாதிப்புப் வேகமாகப் பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, டெங்கு கொசுக்களைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.
பெங்களூருவை மிரட்டும் காய்ச்சல்:
பெங்களூரில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், அவர்களுக்கு மேற்கொள்ளப்படும் டெங்கு பரிசோதனையில் பெரும்பாலான நோயாளிகளுக்கு டெங்கு வைரஸ் இல்லை என்றே பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அவர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகளுக்கான மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர்.
ஒருவருக்கு டெங்கு பாதித்த 3 முதல் 5வது நாளிலிருந்துதான் உடலில் டெங்கு வைரஸ் பரவி இருப்பதை பரிசோதனை முடிவுகள் மூலம் அறிந்துகொள்ள முடியும். ஆகவே, முன்கூட்டியே மேற்கொள்ளப்படும் பரிசோதனை முடிவுகளை பொருட்படுத்தாமல், டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் டெங்கு காய்ச்சலுக்குரிய மருத்துவ சிகிச்சைகளான பாராசிட்டமால் மாத்திரைகள் மற்றும் போதுமான நீர்ச்சத்து எடுத்துக்கொள்வது, ஓய்வெடுப்பது ஆகியவற்றையே மேற்கொள்ள நோயாளிகளை அறிவுறுத்தி வருவதாய் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ரத்தப் பரிசோதனையில் டெங்கு வைரஸ் இல்லை என்று அறியப்பட்டால், அதன்பின் மருத்துவ ஆலோசனையின்றி வலி நிவாரணி மாத்திரைகளும், ஆன்டிபயாடிக் மாத்திரைகளும் எடுத்துக்கொள்வது அபாயகரமாக அமையும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
டெங்கு பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், மாநில அரசு மருத்துவ அவசர நிலையாக அறிக்க வேண்டுமென பெங்களூரு கிராமப்புற தொகுதி எம்.பி.யும், ஸ்ரீ ஜெயதேவா இருதய மருத்துவ நலப்பிரிவு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநரான சி. என். மஞ்சுநாத் தெரிவித்துள்ளார். டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கையில் பிரத்யேக செயற்குழுவை அமைத்து, கொசுக்கள் பரவுதலைக் கட்டுப்படுத்த வேண்டுமென அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.