டெல்டா பாசனம்: மேட்டூர் அணையில் இருந்து ஜூன்.12-ல் தண்ணீர் திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் | Chief Minister Stalin to inaugurate water release for Delta irrigation on June 12

1357628.jpg
Spread the love

மேட்டூர்: டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை வரும் ஜூன் 12-ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார் என நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் தமிழக நீர்வளத் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். அணையின் வலது கரை, இடது கரை, 16 கண் மதகு, சுரங்கம் உள்ளிட்ட பகுதிகளையும், அணையில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும் பார்வையிட்டார். மேல்மட்ட மதகு, கீழ்மட்ட மதகு ஆய்வு சுரங்கம் மற்றும் அணை மின் நிலையத்தையும் ஆய்வு மேற்கொண்டார்.

அணைக்கு வரும் நீரின் அளவு, நீர் வெளியேற்றம் குறித்து கேட்டறிந்தார். பின்னர், நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வழக்கமான ஆய்வு பணிக்காக வந்துள்ளேன். மேட்டூர் அணை பராமரிப்பு பணி சிறப்பாக நடந்து வருகிறது. மேட்டூர் அணை நல்ல நிலையில் உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் முன்பாக நேரடியாக பார்வையிட்டு அணையின் நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜூன் 12-ம் தேதி, தமிழ்நாடு முதல்வர் நேரில் வந்து மேட்டூர் அணை திறப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் முன்கூட்டியே பராமரிப்பு பணிகளை முடிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் கூடுதல் பணிகள் கேட்டுள்ள நிலையில், அந்தப் பணிகள் வழங்கப்படும். தற்போது, ரூ 20 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. 6 மாதங்கள் மட்டுமே பணிகள் செய்ய முடியும். தற்போது, 2 மாதங்களுக்கு முன்பாக மேட்டூர் அணை பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை திறப்பிற்கு முன்பாக இந்தப் பணிகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை திறக்கப்பட்ட பிறகு பணிகள் நிறுத்தப்படும். பாசன காலம் முடித்த பிறகு பணிகள் துவக்கப்படும். என்றார். ஆய்வின் போது மேட்டூர் செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர்கள் செல்வராஜ், மதுசூதனன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

நீர்வரத்து சரிவு: மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து விநாடிக்கு 1,872 கன அடியாக இருந்த நிலையில் இன்று 922 கன அடியாக சரிந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 107.79 அடியாகவும், நீர் இருப்பு 75.30 டிஎம்சியாகவும் உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *