தஞ்சாவூர்: தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, 80 சதவீதம் அறுவடைப் பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சியுள்ள வயல்களில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கொள்முதல் நிலையங்களில் சாக்குகள் பற்றாக்குறை, ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை சேமிப்புக் கிடங்களுக்கு அனுப்பாதது போன்றவற்றால் தற்போது கூடுதலாக நெல்லைக் கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், மழைநீரில் நனைந்து நெல்லில் ஈரப்பதம் அளவு அதிகரித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், கொள்முதல் நிலைய வளாகங்களிலும், அவற்றின் அருகேயுள்ள சாலைகளிலும் நெல்லைக் கொட்டிவைத்து விவசாயிகள் வாரக்கணக்கில் காத்திருக்கின்றனர். இவ்வாறு பல்வேறு கொள்முதல் நிலையங்களிலும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. இதனால், நெல்லை விற்று தீபாவளி பண்டிகையைக் கொண்டாட திட்டமிட்டிருந்த விவசாயிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும், வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளியைக் கொண்டாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, காட்டூர், கண்டிதம்பட்டு உள்ளிட்ட கொள்முதல் நிலையங்களில் 12 நாட்களுக்கு மேலாக நெல் மூட்டைகளுடன் காத்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “12 நாட்களாக காத்திருந்தும் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால், கடன் வாங்கி தீபாவளியைக் கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்க காத்திருக்கும் விவசாயிகளுக்கு இந்த தீபாவளி கசப்பாக மாறிஉள்ளது” என்றனர்.