சென்னை: பருவமழைக்கு முன்னதாக நெல்லை கொள்முதல் செய்யாததால், டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், நடப்பாண்டு 6.50 லட்சம் ஏக்கரில் குறுவைப் பருவ நெல் சாகுபடி நடந்துள்ளது. நெல் அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நெல்லில், 40 சதவீதம் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தினமும் 2 ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்வதாக திமுக அரசு அறிவித்திருந்தது. ஆனால், வெறும் 800 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். திமுக அரசின் அலட்சியத்தால் டெல்டா மாவட்டங்களில், 20 லட்சம் டன் நெல் வீணாகி வருவதாக தகவல்கள் வருகின்றன. நெல் கொள்முதல் செய்யாமல் சுமார் 20 நாட்கள் காலதாமதம் ஆனதால் தொடர் மழையால் நெல் முளைத்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, போர்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நிவாரணம் வழங்க வேண்டும்: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: நெல் கொள்முதலை திமுக அரசு துரிதப்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். ஆனாலும், அலட்சியப்போக்குடன் செயல்பட்டு,நெல்மூட்டைகளை சேதப்படுத்தியது மட்டுமின்றி அறுவடைக்குத் தயாராக இருந்த 1 லட்சத்துக்கும் அதிகமான ஏக்கர் நெற்பயிர்களையும் தண்ணீரில் மிதக்கவிட்டு விவசாயிகளை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது திமுக அரசு. அறுவடை செய்யப்பட்ட நெல்லைப் போர்க்கால அடிப்படையில் உடனடியாகக் கொள்முதல் செய்திடவும், பாதிப்புக்குள் ளான நெற்பயிர்களுக்கு ஏக்கர் ரூ.50 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கிடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.