டெல்டா மாவட்டங்களில் 40% அளவுக்கு மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது: அன்புமணி | Only 40 percentage of paddy has been procured in Delta districts says Anbumani

1380427
Spread the love

சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நெல்லில் 40% அளவுக்கு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 60% நெல் இன்னும் கொள்முதல் செய்யப்படாமல் திறந்த வெளிகளில் கொட்டி வைக்கப்பட்டிருக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பருவ நெல் கொள்முதலில் நடக்கும் அநீதிகளையும், குளறுபடிகளையும் பலமுறை சுட்டிக்காட்டியும் அவற்றை சரி செய்ய தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பருவமழைக்கு முன்பாகவே நெல்லை கொள்முதல் செய்யுங்கள்; நெல் கொள்முதலுக்கான ஈரப்பத வரம்பை 25% ஆக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என பாட்டாளி மக்கள் கட்சியும் விவசாய அமைப்புகளும் பல முறை வலியுறுத்தியும் அவற்றை செய்யத் தவறியதன் மூலம் விவசாயிகளுக்கு அரசு துரோகம் செய்துள்ளது.

காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்து வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகள் அங்கிருந்து கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாதது குறித்தும், கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு சென்ற நெல் கொள்முதல் செய்யப்படாமல் குவித்து வைக்கப்பட்டிருப்பது குறித்தும் கடந்த 10-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் விரிவாக விளக்கி நிலைமையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.

ஆனால், விவசாயிகள் இவ்வளவு துயரத்தை அனுபவித்து வரும் போதிலும், அதைப் போக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அதே நிலை தான் இன்னும் தொடர்கிறது.விவசாயிகளைப் பொறுத்தவரை இந்த ஆண்டும் தீபாவளி இருளாகத் தான் அமைந்தது.

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் 6.13 லட்சம் ஏக்கர் பரப்பில் சுமார் 70% அறுவடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அவ்வாறு அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நெல்லில் 40% அளவுக்கு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 60% நெல் இன்னும் கொள்முதல் செய்யப்படாமல் திறந்த வெளிகளில் கொட்டி வைக்கப்பட்டிருக்கிறது.

காவிரி பாசன மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், அறுவடை செய்யப்படாத வயல்களில் நெல் மணிகள் உதிர்ந்து முளைத்து விடும் ஆபத்து இருப்பதால், உடனடியாக அறுவடை செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அடுத்த ஒரு வாரத்திற்குள் குறுவை நெல் அறுவடை முற்றிலுமான முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கூடுதலாக வரும் நெல்லும் கொள்முதல் நிலையங்களில் கிடத்தப்பட்டு மழையில் நனைந்து வீணாகும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அதைத் தடுக்க திமுக அரசு என்ன செய்யப்போகிறது?

கொள்முதல் நிலையங்களில் நெல் தேங்கியிருப்பதற்காக தமிழக அரசு இல்லாத காரணங்களையெல்லாம் கூறி வருகிறது. செறிவூட்டப்பட்ட அரிசி கொள்முதல் செய்வதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்தால், விவசாயிகளின் நலன்களை கருத்தில் கொண்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து விரைவாக பெற திமுக அரசு தான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால், மத்திய அரசு அதன் வழிகாட்டுதல்களை ஜூலை 29ஆம் தேதி வழங்கிய நிலையில், அதன்பின் செறிவூட்டப்பட்ட அரிசியை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை இறுதி செய்ய 71 நாள்கள் தமிழக அரசு எடுத்துக் கொண்டது. குறுவை பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல்லை விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் கொள்முதல் செய்யத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமை. அந்தக் கடமையில் இருந்து தவறி விட்டு, இல்லாத காரணங்களைக் கூறி பொறுப்பைத் தட்டிக்கழிக்க முயல்வது அரசுக்கு அழகல்ல.

கொள்முதல் நிலையங்களில் நெல் அதிக அளவில் தேங்கிக் கிடப்பதற்கு இன்னொரு முதன்மைக் காரணம் போதிய எண்ணிக்கையில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாதது ஆகும். 10 காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் இரு மடங்கு, அதாவது 1805 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உண்மையில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இம்மாவட்டங்களில் 2156 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன; 2022-23 ஆம் ஆண்டில் 2094 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன. அவற்றுடன் ஒப்பிடும் போது நடப்பாண்டில் கிட்டத்தட்ட 350 கொள்முதல் நிலையங்கள் குறைவாகவே திறக்கப்பட்டுள்ளன.

அதிலும் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 599 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது 292 மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டின் எண்ணிக்கையான 535 நிலையங்களை விட குறைவாக 173 நிலையங்களும், நாகை மாவட்டத்தில் 176 கொள்முதல் நிலையங்களுக்கு பதிலாக 124 நிலையங்களும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 179 நிலையங்களுக்கு பதில் 144 மையங்களும் மட்டும் தான் திறக்கப்பட்டுள்ளன.

கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 25% ஆக உயர்த்த அனுமதிக்கும்படி மத்திய அரசிடம் பேசி ஒப்புதல் பெற வேண்டும் என்று கடந்த 10ஆம் தேதியே நான் வலியுறுத்தியிருந்த நிலையில், மிகவும் தாமதமாக 18ஆம் தேதி தான் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

அந்தக் கடிதம் மத்திய அரசின் கவனத்திற்கு சென்றதா? என்பது கூட தெரியாத நிலையில், மத்திய அமைச்சர் அல்லது அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக அரசு இந்த அளவுக்கு அலட்சியம் காட்டுவது விவசாயிகளுக்கு செய்யும் துரோகமாகும்.

கொள்முதல் செய்யப்படும் நெல்லை மூட்டை கட்டி கிடங்குகளுக்கும், ஆலைகளுக்கும் அனுப்புவதற்காக மேற்கு வங்கத்தில் இருந்து சாக்குகள் வாங்கப்பட்டிருப்பதாக அரசு கூறி வரும் நிலையில், அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் சாக்குகளுக்கு பெருமளவில் பற்றாக்குறை நிலவுவதாக கொள்முதல் நிலையப் பணியாளர்களும், விவசாயிகளும் கூறுகின்றனர். அதேபோல், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல போதிய எண்ணிக்கையில் சரக்குந்துகளும் இல்லை எனக் கூறப்படுகிறது.

இவ்வளவு குறைகளை வைத்துக் கொண்டு நெல்லை கொள்முதல் செய்ய போதிய ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன என்று வெற்று வசனங்களை மட்டுமே திமுக அரசு பேசிக் கொண்டிருக்கிறது. இதனால் யாருக்கும், எந்த பயனும் இல்லை.

இதனால், இத்தகைய விளம்பர நாடகங்களை அரங்கேற்றுவதை விடுத்து, குறுவை நெல் மேலும், மேலும் மழையில் நனைந்து வீணாவதைத் தடுக்கும் வகையில், கூடுதல் கட்டமைப்புகளை ஏற்படுத்தி தேங்கிக் கிடக்கும் நெல் முழுவதையும் அடுத்த ஒரு வாரத்தில் கொள்முதல் செய்து முடிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதன் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பைக் குறைக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *