டெல்லியில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல் | 1556 kg of spoiled mutton brought from Delhi to Chennai seized

1308811.jpg
Spread the love

சென்னை: டெல்லியில் இருந்து ரயில்மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 1,556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சியை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு மலிவான விலையில் தரமற்ற இறைச்சிகள் கொள்முதல் செய்து கொண்டு வரப்பட்டு, விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, உரிய ஆவணங்கள், பாதுகாப்பின்றி ரயில்கள் மூலம் கொண்டு வரப்படும் தரமற்ற இறைச்சிகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி பறிமுதல்செய்து வருகின்றனர்.

கடந்த ஆக.20-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து கொண்டுவரப்பட்ட 1,700 கிலோ தரமற்ற ஆட்டிறைச்சியை, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக கடந்த சனிக்கிழமை செப்.7-ம் தேதி, டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டுவரப்பட்ட தரமற்ற ஆட்டிறைச்சி சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பார்சல் சர்வீஸ் பகுதியில் வைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகிகள் உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறைநியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர், அவற்றை நேற்று சோதனையிட்டனர். பெயர், முகவரி போன்றவை குறிப்பிடப்படாத 28 தெர்மோகோல் பெட்டிகளில் 1,556 கிலோ ஆட்டிறைச்சி, ஆட்டுக்கால்கள், காளான்கள், ஷீப்கபாப் போன்றவை கெட்டுப்போய் அழுகியநிலையில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதன் மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பினர். பின்னர் இறைச்சி கெட்டுப்போனதை உறுதிசெய்து, அவற்றை கொடுங்கையூர் குப்பை கிடங்கு கொண்டு சென்று முறையாக அழிக்க நடவடிக்கை எடுத்தனர்.

கெட்டுப்போன இறைச்சி எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, அதன் உரிமையாளர் யார், எந்தெந்த உணவகங்களுக்கு இவை விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தன என்பவை குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *