டெல்லியில் மதுபான கொள்ளை விவகாரத்தில் ஏற்கனவே முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டு நிபந்தனை ஜாமமீனில் வெளியே வந்து உள்ளார்.
மோதல் போக்கு
இதற்கிடையே ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி ஸ்வாதி மாலிவால் தம்மை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தாக்கியதாக புதிய புயலை கிளப்பினார். இது குறித்து புகாரின்பேரில் அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ் குமார் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். இது ஆம் ஆம் ஆத்மி கட்சியினரை கொந்தளிக்க வைத்தது. இதனால் பா.ஜனதா, ஆம்ஆத்மி கட்சியினர் இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் இன்று(19ந்தேதி) ஆம் ஆத்மிக் கட்சித் தலைவர்கள் முற்றுகையிடப்போவதாக அறிவித்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை முதலே டெல்லி ஆம் ஆத்மி தலைமை அலுவலகம் நோக்கி அக்கட்சியினர் திரண்டனர்.
144 தடை
மேலும் ஆத்மி அலுவலகம் அருகே போலீசாரும் குவிக்கப்பட்டனர்.ஆம் ஆத்மி அலுவலகத்துக்கு வெளியே 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டது. பா.ஜனதா தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாக செல்லவும் தடை விதிக்கப்பட்டு அந்த பகுதிக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் இன்று காலை முதலே டெல்லி பரபரப்பாக காணப்பட்டது.
பேரணி-ஆர்ப்பாட்டம்
மதியம் 12 மணிக்கு மேல் முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி தொண்டர்கள் ஒன்று திரண்டு பா.ஜ.க. தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அரவிந்த கெஜ்ரிவால் மற்றும் அவரது தொண்டர்கள் ஆம்ஆத்மி கட்சி அலுவலகத்திற்கு திரும்பினர். பின்னர் அவர்கள் கட்சி அலுவலகம் முன்பாகவே அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.