புதுடெல்லி: டெல்லியில் உள்ள மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் இல்லத்துக்கு நேரில் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், யெச்சூரியின் மனைவி மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அண்மையில் காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் புதுடெல்லியில் உள்ள இல்லத்துக்கு நேரில் சென்று, அவரவது உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், சீதாராம் யெச்சூரியின் மனைவி சீமா சிஸ்டி மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்தச் சந்திப்பின்போது, திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். மேலும், இன்று காலை பிரதமர் மோடியைச் சந்தித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், சமக்ர சிக்ஷ அபியான் என்ற மத்திய அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும், இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு வேண்டும், சென்னை மெட்ரோ 2-ம் கட்டப் பணிகளுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்திருந்தார்.