டெல்லி: அரசு விருந்தினர் மாளிகை கட்டியதில் ஊழல் – மகாராஷ்டிரா அமைச்சர் உட்பட 46 பேர் விடுவிப்பு

Spread the love

2005-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் சகன் புஜ்பால் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, டெல்லியில் `மகாராஷ்டிரா சதன்’ கட்டுவதற்கு டெண்டர் விடாமல் சமன்கர் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு பணி வழங்கப்பட்டது. இதில் அமைச்சர் சகன் புஜ்பாலுக்கு ரூ. 6.03 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சகன் புஜ்பால், அவரது மகன் பங்கஜ் புஜ்பால், உறவினர் சமீர் புஜ்பால் உட்பட 46 பேர் மீது வழக்கு பதிவுசெய்தது. இவ்வழக்கில் சகன் புஜ்பால் கைது செய்யப்பட்டு சில காலம் சிறையில் இருந்தார். வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் கடந்த 2021ம் ஆண்டு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி அவர்களை விடுவித்து உத்தரவிட்டது.

இதில் பில்டரும், பா.ஜ.க எம்.பியுமான சஞ்சய் காகடே என்பவர் பெயரும் சேர்க்கப்பட்டு இருந்தது. சகன் புஜ்பால் மற்றும் அவரது உறவினர்கள் மீது அமலாக்கப்பிரிவும் தனியாக பணமோசடி தொடர்பாக விசாரித்து வந்தது.

இது தொடர்பான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. நீதிபதி சத்யநாயாரணன் இவ்வழக்கை விசாரித்து வந்தார். இதில் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ள நீதிமன்றம், ஏற்கனவே விசாரணை நீதிமன்றம் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை ஊழல் மற்றும் மோசடி வழக்குகளில் இருந்து விடுவித்து இருப்பதை சுட்டிக்காட்டி இவ்வழக்கில் தொடர்புடைய 46 பேரையும் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் சகன் புஜ்பாலும் மற்றவர்களும் இவ்வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மாநில அரசும் மேல் முறையீடு செய்யவில்லை என்பதை நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டி இருக்கிறார். அமலாக்கத்துறையின் வழக்கானது ஊழல் தடுப்புப் பிரிவின் வழக்கை அடிப்படையாகக் கொண்டது. முதன்மையான குற்றத்துடன் தொடர்புடைய குற்றச் செயல்களின் வருமானம் இல்லாத நிலையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுப்பது, வேர்களற்ற மரத்திற்கு ஒப்பானது.

அது சட்டப்பூர்வமான ஆதாரமற்றது. ஒரு பணமோசடி குற்றச்சாட்டிற்கு அடிப்படை, முதன்மைக் குற்றத்தின் மூலம் ஈட்டப்பட்ட சட்டவிரோதப் பணம்தான் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டார்.

முதன்மைக்குற்றம் நிலுவையில் இல்லாதபோதும், ‘குற்றத்தின் மூலம் கிடைத்த வருமானம்’ இல்லாதபோதும் பணமோசடி தடுப்புச்சட்டத்தின் பிரிவு 3 மற்றும் 4-இன் கீழ் எந்தக் குற்றமும் நிரூபிக்கப்பட முடியாது. பணமோசடி வழக்கை நிரூபிக்க தேவையான அடிப்படை குற்றவியல் வழக்கே ‘மூலக்குற்றம்’ ஆகும். மூலக்குற்றமே இல்லாதபோது, ​​பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் தொடரப்பட்ட வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்ததையும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

2015ம் ஆண்டுதான் இம்மோசடி தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சகன் புஜ்பால் மீதும் அவரது உறவினர்கள் மற்றும் இதில் தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது. அதன் பிறகு ஒரு வாரம் கழித்து மும்பை கலீனாவில் அரசு நிலத்தை மலிவு விலைக்கு விற்றதாக மேலும் ஒரு வழக்கை பதிவு செய்தது. 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவ்வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 2021ம் ஆண்டு சகன் புஜ்பால் உட்பட 7 பேரை இவ்வழக்கில் இருந்து கோர்ட் விடுதலை செய்து உத்தரவிட்டது.

புஜ்பாலுக்கு பில்டர் லஞ்சம் கொடுத்ததற்கு ஆதாரம் இல்லை என்று கோர்ட் தெரிவித்தது. அமலாக்கப்பிரிவும் மகாராஷ்டிரா சதன் கட்டிடம் கட்டியதில் நடந்த ஊழல் தொடர்பான தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. சகன் புஜ்பாலும், அவரது மகன் பங்கஜ், உறவினர் சமீர் புஜ்பால் ஆகியோர் பில்டர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் ரூ.1000 கோடி அளவுக்கு வாங்கி மோசடி செய்து இருப்பதாக குற்றம் சாட்டி பணமோசடி வழக்காக விசாரித்து வந்தது. 2016ம் ஆண்டு மார்ச் மாதம் அமலாக்கப்பிரிவு பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் சகன் புஜ்பால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2018ம் ஆண்டு மே மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தற்போது மகாராஷ்டிரா பாஜக தலைமையிலான அரசில் புஜ்பால் அமைச்சராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *