Last Updated:
டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், அப்பல்கலைக்கழகம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
பரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகம் காலாவதியான NAAC தரச்சான்று மூலம் மாணவர்களிடம் பணம் வசூலித்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். இதில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலான NAAC-யின் காலாவதியான தரச்சான்றை கொண்டு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடத்தியது, பணம் வசூலித்தது உள்ளிட்ட முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்கள், அதுசார்ந்த அறக்கட்டளை உள்ளிட்ட அனைத்தும் ஒரே PAN நம்பர் கொண்டு இயங்கியது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே, கார் குண்டு வெடிப்புக்கு காரணமான உமர் நபியின் செல்போனை கைப்பற்றிய காஷ்மீர் சிறப்பு படையினர், அதில் தீவிரவாத தாக்குதல்களை நியாயப்படுத்தி பேசிய வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
சிறப்புப் படையின் விசாரணையில் டெல்லி குண்டு வெடிப்புக்கு சில நாட்கள் முன் உமர் நபி காஷ்மீரில் இருந்ததும், தனது செல்போனை அவரது சகோதரரிடம் வழங்கியதும் தெரியவந்துள்ளது.
மேலும், தன்னைப் பற்றிய செய்திகள் வெளிவந்தால் செல்போனை தண்ணீரில் வீசும்படியும் உமர் நபி தெரிவித்ததாக அவரது சகோதரர் சாஹூர் இலாஹி வாக்குமூலம் அளித்துள்ளார்.
November 19, 2025 3:22 PM IST
