“டெல்லி காவி அணியின் கனவுத் திட்டம் பலிக்காது!” – முதல்வர் ஸ்டாலின் பேச்சு | “Delhi Saffron’s Dream Plan will not Work!” – CM Stalin’s Speech

1369514
Spread the love

சிதம்பரம்: “தமிழ்நாடு ஓரணியில் நிற்கும்போது, டெல்லி காவி அணியின் கனவுத் திட்டமும் பலிக்காது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று (ஜூலை 15) முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். காமராஜர் பிறந்த நாளையொட்டி, சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவே வாழ்ந்து தனது வாழ்வையே அர்ப்பணித்தவரான எல்.இளையபெருமாள் திருவுருவச் சிலையுடன் ரூ.6.39 கோடி மதிப்பீட்டில் கட்டிப்பட்டுள்ள நூற்றாண்டு அரங்கத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசியது: “ஏற்கெனவே ‘மக்களுடன் முதல்வர்’ திட்டதில் பல லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது. தற்போது தொடங்கப்பட்டுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 10,000 முகாம்கள் நடைபெறும். தன்னார்வலர்கள் வீடுவீடாக வந்து மக்களின் குறைகளைக் கேட்டு, 46 சேவைகளுக்கான விண்ணப் பங்களை வழங்க உள்ளனர்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டும் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் வழங்கப்படும். தகுதி உள்ள மகளிர்க்கு கண்டிப்பாக மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தின் கீழ் சேவைகளைச் செய்ய மக்களைத் தேடி அதிகாரிகள், அலுவலர்கள் வருவார்கள்.

ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளி விளக்காகத் திகழ்ந்த இளையபெருமாளின் நூற்றாண்டு நினைவரங்கைத் திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகி றேன். சமூக சீர்திருத்தவாதிகள் அயோத்தி தாசர் பண்டிதர், தாத்தா இரட்டை மலை சீனிவாசன், எம்.சி.ராஜா, சிவராஜ், சாமி சகஜனந்தா வரிசையில் கம்பீரமாகப் போராடியவர்தான் பெரியவர் இளையபெருமாள்.

இந்த மேடையில் மார்க்சிய இயக்கத் தலைவர்கள், காந்திய வழித் தலைவர்கள், அம்பேத்கர் வழித் தலைவர்கள் ஒற்றுமையாக அமர்ந்திருக் கிறோம். இதைத்தான் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்று சொல்கிறேன். இதேபோல, தமிழ்நாடு ஓரணியில் நிற்கும்போது, டெல்லி காவி அணியின் கனவுத் திட்டமும் பலிக்காது.

அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டி தலைவராக இளையபெருமாள் இருந்தபோது, நாடு முழுவதும் பயணித்து, பட்டியலின மக்களின் மீதான சாதியக் கொடுமைகளை ஆய்வு செய்து, அறிக்கையை உருவாக்கினார். அவர் அளித்த அறிக்கை, சாதி அமைப்பை துல்லியமாகப் பதிவு செய்தது. அந்த அறிக்கை வெளிய வரக்கூடாது என்பதற்காக அவரைத் தாக்கினார்கள். அதிலிருந்து தப்பி நாடாளுமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தார். அவரது அறிக்கையின் அடிப்படையில்தான் தமிழகத்தில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த 29 அர்ச்சகர்கள், வெவ்வேறு கோயில்களில் பணியாற்றி வருகிறார்கள்.

1998-ல் அம்பேத்கர் பெயரிலான தமிழக அரசு விருதை முதன்முதலாக இளையபெருமாளுக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி வழங்கினார். தற்போது நூற்றாண்டு அரங்கம் மற்றும் சிலையை திறந்து வைத்திருப்பது திராவிட மாடல் அரசு, அவருக்கு செலுத்தும் நன்றியாகும்.

புதிய அறிவிப்பு: கடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி பகுதிகளில் வாழும் மகளிருக்கு வேலை வாய்ப்புகளை அளிக்கும் வகையில், குறிஞ்சிப்பாடி அருகில் இருக்கும் கொடுக்கன்பாளையத்தில் 150 ஏக்கர் பரப்பளவில், தோல் அல்லாத காலணி மற்றும் காலணிகளுக்கான உதிரி பாகங்கள் உற்பத்திக்கான பெரும் தொழில் பூங்கா அமைக்கப்படும்.

சுற்றுச்சூழலுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில், 75 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள இந்த தொழில் பூங்காவில், சுமார் 12 ஆயிரம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், சாமிநாதன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *