டெல்லி தான் எல்லாம் முடிவு எடுக்கிறது, எடப்பாடி அமித்ஷா சந்திப்பு ஸ்டாலின் விமர்சனம்  – Kumudam

Spread the love

இந்த நிலையில், திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்றும் மடல் எழுதியுள்ளார். அதில், “கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியைச் சிறப்பாக நடத்தினோம். ஆனால், அது நமக்கு எளிதானதாக இல்லை. தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசின் தமிழர் விரோத – பழிவாங்கும் போக்கினால் ஏற்பட்ட பாதிப்புகளை எதிர்கொண்டு, மாநில உரிமைக்கான போராட்டத்தைத் தொடர்ந்தபடியே, ஜனநாயகம் காக்கும் அறப்போர்க்களத்தில் நின்றபடியே தான் எண்ணிக்கையில் அடங்காத சாதனைத் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம். அதனால்தான், 2026 தேர்தல் களத்தைத் தமிழ்நாடு அணிக்கும் டெல்லி அணிக்குமான தேர்தல் என்று தொடர்ந்து சொல்லி வருகிறேன்.

தமிழ்நாடு VS டில்லி என்பதை முன்வைத்துதான் இந்தத் தேர்தல் களம் என்று நாம் சொல்வதை நிரூபிப்பது போலவே, டெல்லியில் இருந்துதான் எல்லாம் முடிவு செய்யப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவரும் அவரது சகாக்களும் டெல்லியில் இருப்பது எதற்காக? தமிழ்நாட்டிற்கு வழங்கப்படாமல் வஞ்சிக்கப்படும் நிதியை வாங்கித் தருவதற்காகவா? தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படாமல் முடக்கப்பட்டிருக்கும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவதற்காகவா? மாநில உரிமைகளைக் காப்பாற்றுவதற்காகவா? சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காகவா? இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை.

தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில் அடுப்பு எரிந்தால் என்ன, எரியாவிட்டால் எங்களுக்கென்ன என்ற மனநிலையுடன்தான் எதிர்க்கட்சியினர் தங்களது கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கிறனர். தேர்தல் களத்தைச் சந்திப்பதற்கே டெல்லியின் சம்மதம் வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களின் கைகளில் தமிழ்நாடு சிக்கிக்கொண்டால் ஒவ்வொரு நாளும் என்ன பாடுபட வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்துள்ள தமிழ் மக்கள் ஒருபோதும் டெல்லியின் ஆதிக்கத்தையும், அதன் அடிமைக் கூட்டத்தையும் அனுமதிக்க மாட்டார்கள். 

தங்கள் சுயநலனுக்காகச் சொந்தக் கட்சியை அடமானம் வைத்ததுபோல, தமிழ்நாட்டையும் டெல்லியிடம் அடகு வைக்கத் தயங்காதவர்கள் அவர்கள் என்பதை மக்கள் அறிவார்கள். இனி எதிர்க்கட்சியினர் எடுக்கும் முடிவு என்பது டெல்லி எடுக்கும் முடிவுதான் என்பதையும் மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்பதற்கும், தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்குமான வலிமை தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே உண்டு என்பதே மக்களின் உறுதியான நம்பிக்கை. அந்த நம்பிக்கையை உருவாக்கியது திராவிட மாடல் ஆட்சி. அதனால் நாம் மக்களிடம் செல்வோம். களத்தில் நின்று வெற்றியைப் பெறுவோம்.

பேரறிஞர் அண்ணா நம்மை விட்டு மறைந்தபோது, தி.மு.கழகத்தையும் ஆட்சியையும் கருணாநிதி தன் தோளில் சுமந்து, 1971-ஆம் ஆண்டு தேர்தலில் மகத்தான வெற்றியுடன் தொடர்ந்து ஆட்சியில் அமரச் செய்தார். அதுபோல நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதி நம்மிடையே இல்லாவிட்டாலும் அவருடைய கொள்கைப் பாதையில் திராவிட மாடல் அரசு தொடர்ந்து அமைந்திட, 2026 தேர்தல் களத்தில் நிச்சயம் வெல்வோம் என உறுதிகொள்கிறேன், உடன்பிறப்புகளே உங்களின் அயராத உழைப்பின் மீதுள்ள நம்பிக்கையால்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *