ஆஸ்திரேலிய டி20 அணியில் டேவிட் வார்னரின் இடத்துக்கு மாற்று வீரராக உருவாக அந்த அணியின் மேத்யூ ஷார்ட் ஆர்வம் காட்டி வருகிறார்.
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நேற்று (செப்டம்பர் 11) தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
சிறப்பாக விளையாடிய மேத்யூ ஷார்ட்
இந்த போட்டியில் டிராவிஸ் ஹெட்டுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மேத்யூ ஷார்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 26 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
இங்கிலாந்து ஒருநாள் அணியில் லியம் லிவிங்ஸ்டன் மீண்டும் இடம்பிடிப்பாரா?
டேவிட் வார்னர் இடத்துக்கு குறிவைக்கும் மேத்யூ ஷார்ட்
ஸ்காட்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலிய வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடினார். ஆனால், அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினார்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் மேத்யூ ஷார்ட் தொடக்க ஆட்டக்காரராக முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். டேவிட் வார்னரின் தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு மாற்று வீரராக மேத்யூ ஷார்ட் உருவாகி வருகிறார்.
தொடக்க ஆட்டக்காரர் இடம் குறித்து மேத்யூ ஷார்ட் பேசியதாவது: டேவிட் வார்னர் தொடக்க ஆட்டக்காரராக தற்போது இல்லை. அவருடைய அந்த இடம் நிரப்பப்படுவதற்காக உள்ளது. ஸ்காட்லாந்துக்கு எதிரான சில போட்டிகளில் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடினார். அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடுவதை விரும்புகிறேன். எனக்கு கிடைத்துள்ள தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறேன். ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரராக என்னை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.