சுயேச்சை எம்.எல்.ஏ-க்களை வளைத்த பா.ஜ.க
காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட பிராந்தியங்களை சேர்த்து முப்பது சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது புதுச்சேரி சட்டப்பேரவை. 2021 தேர்தலில் முதல்வர் ரங்கசாமியுடன் கூட்டணி வைத்த பா.ஜ.க ஒன்பது தொகுதிகளில் போட்டியிட்டது.
அதில் நமச்சிவாயம், ஏம்பலம் செல்வம், சாய் சரவணகுமார், கல்யாணசுந்தரம், ஜான்குமார் மற்றும் அவரது மகன் ரிச்சர்டு ஜான்குமார் போன்ற ஆறு பேர் வெற்றிபெற்றனர். அதேபோல முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பத்து தொகுதிகளில் வெற்றிபெற்றது.
ஆட்சியமைக்க தேவையான 16 இடங்களில் வெற்றி பெற்றதால், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி. அதையடுத்து சபாநாயகர், உள்துறை அமைச்சர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் போன்ற பதவிகளை ரங்கசாமியிடம் கேட்டுப் பெற்றது பா.ஜ.க.

அதன்படி பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களான நமச்சிவாயம், ஏம்பலம் செல்வம், சாய் சரவணகுமார் போன்றவர்கள் அமைச்சரவையில் இடம்பிடித்துவிட, கல்யாணசுந்தரம், ஜான்குமார் மற்றும் அவரது மகன் ரிச்சர்டு ஜான்குமார் வெறும் எம்.எல்.ஏ-க்களாகவே தொடர்ந்தனர்.
இதற்கிடையில் முதல்வர் ரங்கசாமியிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களை நியமித்துக் கொண்டது பா.ஜ.க தரப்பு. அத்துடன் உழவர்கரை சுயேச்சை எம்.எல்.ஏ சிவசங்கரன், ஏனாம் தொகுதியின் எம்.எல்.ஏ கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் மற்றும் திருபுவனை தொகுதியின் சுயேச்சை எம்.எல்.ஏ அங்காளன் உள்ளிட்டவர்களை தங்கள் கட்சி ஆதரவாளர்களாக வளைத்துப் போட்டது.
அதன் மூலம் தங்கள் எம்.எல்.ஏ-க்களின் பலத்தை உயர்த்திக் காட்டிய பா.ஜ.க, அவர்களுக்காக வாரியத் தலைவர் பதவிகளைக் கேட்டது.