ட்ரம்ப்பின் வரி விதிப்பை கண்டித்து செப். 5-ல் ஆர்ப்பாட்டம் – இடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை | Left parties protest in Tamil Nadu on September 5th, condemning the US government’s aggressive tax attack

1374540
Spread the love

சென்னை: அமெரிக்க அரசின் அடாவடி வரி விதிப்பு தாக்குதலை கண்டித்து தமிழகத்தின் தொழில் நகரங்களில் சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் சார்பில் செப்டம்பர் 5 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிபிஐ, சிபிஎம், சிபிஐ(எம்எல்) சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் கூட்டறிக்கையில், “அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் யுத்த வெறிக் கொள்கை உலகம் அறிந்துள்ள செய்தியாகும். அந்த நாட்டின் அதிபராக டோனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்ட (ஜனவரி 2025) ஆரம்ப நாளிலிருந்து இந்தியா மீதான வெறுப்பை உமிழ்ந்து வருகிறார். அங்கு பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த இந்தியர்களின் “விசா”வை காரணமாக்கி, அவர்களை போர்க்கைதிகளை போல், கைகளில் விலங்கு போட்டு திருப்பி அனுப்பி அவமதித்தார்.

நாட்டின் எரிபொருள் தேவைக்காக ரஷ்யாவில் இருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்கி வருவதை இந்தியா உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என டிரம்ப் அரசு தொடர்ந்து மிரட்டி நிர்பந்தித்து வந்தது. அமெரிக்காவின் நவீன காலனி ஆதிக்கக் கொள்கைக்கு இந்தியா துணை போகக் கூடாது என இடதுசாரி, ஜனநாயக சக்திகள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன.

இந்திய அரசின் மென்மையான அணுகுமுறை காரணமாக, இப்போது அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கான வரியும், அபராதமும் சேர்த்து 50 சதவீதமாக உயர்த்தி ஆகஸ்டு 27, 2025 முதல் வசூலிக்க அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பால் நமது நாட்டின் ஜவுளி, பின்னலாடை, ஆயத்த ஆடைகள், ஆபரணங்கள், இறால், தோல் மற்றும் தோல் பொருட்கள், மின்சார எந்திர சாதனங்கள் என பல பிரிவுகளில் உற்பத்தித் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், இதன் காரணமாக ஏற்றுமதியில் 66 சதவிகித வீழ்ச்சி ஏற்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 4 ஆயிரத்து 820 கோடி டாலர் மதிப்புள்ள வணிக வாய்ப்பை இழக்க வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக ஏற்றுமதியை சார்ந்து நடைபெறும் தொழில்களில் 70 சதவிகிதம் உற்பத்தியை வெட்டிக் குறைக்க வேண்டும் என்பது பல்லாயிரம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் பேரபாயம் கொண்டதாகும். நாட்டின் சுய பொருளாதாரத்தை கடுமையாக தாக்கி, நவீன காலனி ஆதிக்கப் பிடியில் நாட்டை சுற்றி வளைக்கும் நோக்கம் கொண்ட டிரம்ப் அரசின் வரிவிதிப்பு தாக்குதலை எதிர்த்து, அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் நிர்பந்தத்துக்கு அடிபணியாமல் நாட்டின் இறையாண்மையை, சுயசார்பை பாதுகாக்கும் அரசியல் உறுதியுடன் ஒன்றிய அரசு எதிர் கொள்ள வேண்டும்.

ஏற்றுமதி தொழில்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுத்து, உற்பத்தித் தொழில்களை பாதுகாக்க ஏற்றுமதி மானியம், வரிச்சலுகை உள்ளிட்ட மாற்றுத் திட்டத்தை உருவாக்கி உதவ வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தியும், அமெரிக்க அரசின் அடாவடி வரிவிதிப்புக் கொள்கையை கண்டித்தும் இடதுசாரி கட்சிகளான இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்), இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் ) விடுதலை சார்பில் சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருப்பூர், ஈரோடு, ஓசூர், வேலூர், மதுரை, திருச்சி, விருதுநகர், தூத்துக்குடி, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் செப்டம்பர் 5, 2025 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா மீதான அமெரிக்க அரசின் வர்த்தக போரைக் கண்டித்தும், நாட்டின் சுயசார்பு கொள்கை மற்றும் ஏற்றுமதி தொழில்களை பாதுகாக்கவும், தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பை உறுதி செய்யவும் வலியுறுத்தி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துப் பிரிவு மக்களும் பங்கேற்று ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *