தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கின | Thousands of acres of paddy crops were submerged in various districts

1343362.jpg
Spread the love

விருத்தாசலம் / தஞ்சாவூர்: தொடர் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கடந்த 11-ம் தேதி முதல் கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. ஆறுகள், ஓடைகள், வாய்க்கால்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல்வேறு இடங்களில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் வடியாத நிலையில் விளை நிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மருதையாறு மற்றும் தொழுதூர் அணைக்கட்டில் திறக்கப்பட்ட தண்ணீரால் வெள்ளாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. பெண்ணாடம், கருவேப்பிலங்குறிச்சி, வேப்பூர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

விருத்தாசலம் அருகே ஆலிச்சகுடி, இளமங்கலம், சாத்துக்கூடல், தீவலூர், உச்சிமேடு உள்ளிட்ட கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளது.

தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்க மாநிலச் செயலாளர் சக்திவேல் கூறும்போது, “விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் சம்பா சாகுபடி ஒவ்வோர் ஆண்டும் மழையால் பாதிக்கப்படுகிறது. வடிகால்களை முறையாகப் பராமரிக்காததே தண்ணீர் தேங்குவதற்கு காரணம்’‘ என்றார். வேளாண் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தற்போது கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளோம். பாதிப்பு நிலவரம் முழுமையாக தெரிய ஓரிரு தினங்களாகும்” என்றனர்.

தஞ்சாவூர் அருகேயுள்ள ஆர்சுத்திப்பட்டு, அரசப்பட்டு, அருமலைக்கோட்டை, நார்த்தேவன் குடிக்காடு, வடக்கு நத்தம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2,000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா நெற்பயிர்கள் 4 நாட்களுக்கும் மேலாக தண்ணீரில் மூழ்கி, அழுகும் நிலையில் உள்ளன.மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தாளடி நெற்பயிர்களும் மழைநீரில் முழுமையாக மூழ்கியுள்ளன. ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வரை செலவு செய்து, இன்னும் ஒரு வாரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முழுமையாக நீரில் மூழ்கிவிட்டதால் மிகுந்த கவலை அடைந்துள்ள விவசாயிகள், அரசு கணக்கெடுப்பு நடத்தி, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல, பல்வேறு மாவட்டங்களிலும் தொடர் கனமழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *