தஞ்சாவூர்/ நாகப்பட்டினம்: தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் 1,500 ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள், மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதேவேளையில், நெல் கொள்முதலை விரைவுபடுத்தாததைக் கண்டித்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வடகிழக்கு பருவமழையின் தொடக்கமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், வயல்களில் மழைநீர் தேங்கி அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மற்றொரு புறம் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் காட்டூர், வாண்டையார் இருப்பு, தலையாமங்கலம், நெய்வாசல், சாலியமங்கலம், அம்மாபேட்டை உள்ளிட்ட இடங்களில் 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. மழைநீர் வடிந்தால் மட்டுமே அறுவடை செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.
மேலும், தஞ்சாவூர் அருகே காட்டூர் நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பதற்காக ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளுடன் 15 நாட்களாக இரவு பகலாக காத்திருப்பதாகவும், நெல் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியும் தஞ்சாவூர்- மன்னார்குடி சாலையில் விவசாயிகள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியது: நெய்வாசல் பகுதியில் வடிகால் வாய்க்காலை முறையாக தூர் வாராததால் வயலில் தேங்கிய மழைநீர் வடியவில்லை. மழை தொடர்ந்து பெய்து வருவதால் மழைநீர் வடிய வாய்ப்பில்லை. எனவே, மழை நின்று அறுவடை செய்யும் போது அதிகளவில் மகசூல் இழப்பு ஏற்படும்.
எனவே, மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை அலுவலர்கள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நெல்லில் ஈரப்பத அளவை தளர்த்தி கொள்முதல் செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டூர் நெல் கொள்முதல் நிலையத்திலும் 2 வாரங்களாக விவசாயிகள் நெல் மூட்டைகளுடன் காத்திருக்கிறோம்.
ஆனால் சாக்கு தட்டுப்பாடு மற்றும் கொள்முதல் செய்த நெல்லை சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பாததால் மேலும் நெல்லை பிடித்து வைக்க இடம் இன்றி கொள்முதல் பணிகள் முறையாக நடைபெறவில்லை. எனவே, நெல்மணிகள் மழையில் நனைந்து சேதம் ஏற்படும் நிலை உள்ளது. கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளை வேறு இடங்களுக்கு உடனே அனுப்பிவைத்து, கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு முன்பாக விவசாயிகள் கொண்டு வந்துள்ள நெல்மணிகளை முழுமையாக கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதேபோல, நாகை மாவட்டம் கீழ்வேளூர், ஆழியூர், கூத்தூர், ராதாமங்கலம், திருக்கண்ணங்குடி, வடக்காலத்தூர், இருக்கை, தேவூர், செருநல்லூர், செம்பியன்மகாதேவி, கலசம்பாடி, உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கருக்கு அதிகமாக அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் நீரில் சாய்ந்து சேதமடைந்துள்ளன.