தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நெடுஞ்சாலையில் சாலையோரம் கிராமப்புறங்களில் வைக்கப்பட்டிருந்த தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியில் குறிப்பிடப்பட்டிருந்த பெயர்ப் பலகையில் இந்தி எழுத்துக்கள் தார் பூசி அழிக்கப்பட்டது.
தஞ்சாவூர் முதல் புதுக்கோட்டை வரை உள்ள நெடுஞ்சாலையில், கிராமப்புறங்களில் உள்ள ஊர் பெயர்களை குறிக்கும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழியிலும் ஊரின் பெயர்களை குறிப்பிட்டு பெயர் பலகைகள் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த பலகைகளை யார் அமைத்தது எனத் தெரியவில்லை அதற்கான லோகோவும் அதில் இடம்பெறாமல் இருந்தது. இந்த நிலையில் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்களது ஊர் பெயரை இந்தியில் எழுதி வைத்தது யார் என விவசாயிகள் கடந்த 28-ம் தேதி நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினர்.
மேலும் இந்தியில் உள்ள பெயர்ப் பலகையை அகற்றி கிராமப்புறங்களில் இந்தி திணிப்பை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். இது தொடர்பாக நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுவையும் வழங்கினர்.
இந்த நிலையில் நேற்று இரவு தஞ்சாவூர் முதல் புதுக்கோட்டை வரையிலான சாலை ஓரம் கிராமப்புறங்களில் அமைக்கப்பட்டிருந்த ஊர் பெயர் பலகைகளில் இந்தி எழுத்துக்களை நாம் தமிழர் கட்சியினர் மற்றும் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் சார்பில் தார் பூசி அழிக்கப்பட்டது.