தஞ்சாவூர்: ”வாய்க்காலில் 10 இடங்களில் உடைப்பு” – வயல்களை சூழ்ந்த வெள்ளம் வேதனையில் விவசாயிகள்

Spread the love

டெல்டா மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வயல்களில் மழை நீர் தேங்கியதால் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர் நீரில் மூழ்கி பாதிப்பைச் சந்திக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஆயிரக்கணக்கணக்கான ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

உடைப்பு ஏற்பட்ட வாய்க்கால்

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருநல்லூர் கிராமத்தில் உள்ள வேதபுரி வடிகால் வாய்க்காலில் தொடர் மழையில் அதிக அளவிலான தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. உடைப்பு காரணமாக வாய்க்காலில் இருந்து தண்ணீர் அருகில் இருக்கும் வயல்களில் புகுந்து கடல்போல் காட்சியளிக்கிறது. அப்பகுதியில் விவசாயிகள் சம்பா, தாளடி நடவு செய்து ஒரு மாதங்கள் ஆகிறது. வயல்களில் வெள்ளம் தேங்கியதால் ஒரு மாதம் ஆன சம்பா, தாளடி நெற்பயிர் நீரில் மூழ்கின.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், “வேதபுரி வாய்க்காலை தூர் வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் எனப் பலமுறை மனு அளித்து கோரிக்கை வைத்துள்ளோம். அதன் பிறகுகூட வேதபுரி வாய்க்கால் தூர்வாரப்படவில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு மழை நீர் வயலுக்குள் புகுவது தொடர்கிறது. கடந்த சில தினங்களாக பெய்த மழையில் வேதபுரி வாய்க்கால் முழுவதும் வேகமாக மழை நீர் ஓடிக்கொண்டிருந்தது. கரைகள் பலம் இல்லாததால் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்ப்பட்டு மழை நீர் அப்பகுதியில் உள்ள நடவு செய்யப்பட்ட வயல்களில் சூழ்ந்தது.

மழை வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பு

இதனால், நடவு செய்யப்பட்டு ஒரு மாதம் ஆன சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் வயலில் சுமார் 3 அடி அளவில் வாய்க்காலில் இருந்து வந்த தண்ணீர் தேங்கி நிற்பதால் வயல் தற்போது கடல் போல் மாறி விட்டது. நெற்பயிர் முழுவதும் மூழ்கியதால் அழுகும் நிலையும் மகசூல் பாதிப்பும் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நடவு செய்வது முதல் அறுவடை வரை ஏக்கருக்கு சுமார் ரூ.30,000 வரை செவு செலவாகும்.

தற்போது கதிர் விடும் தருணத்தில் பயிர் தண்ணீரில் மூழ்கிவிட்டது. வாய்காலை தூர் வாரி, கரைகளை பலப்படுத்தியிருந்தால் இந்தநிலை ஏற்பட்டிருக்காது. அரசு, அதிகாரிகளும் உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்டு போர்க்கால அடிப்படையில் தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள நிலை குறித்து ஆய்வு செய்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *