தஞ்சாவூர்: தஞ்சாவூா் பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039 ஆவது சதய விழா மங்கல இசையுடன் கோலாகலமாக சனிக்கிழமை தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் விழாவில் நாளை அரசு சார்பில் மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.
உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் தஞ்சை பெரிய கோவிலை கட்டி உலகம் முழுவதும் தமிழர்களின் பெருமையை பறைசாற்றிய மாமன்னன் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார். அதேபோல் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் மன்னராக முடிசூடினார். பிறந்த நாளையும், முடிசூடிய நாளையும் சதயவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு 1039 ஆம் ஆண்டு சதயவிழா மங்கல இசையுடன் கோலாகலமாக சனிக்கிழமை தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து அப்பர் பேரவை சார்பில் திருமுறை முற்றுதல், கருத்தரங்கம், இசை கஞ்சேரிகள் நடைபெறுகிறது. மாலை பழங்கால இசைக்கருவிகளோடு 1039 நடன கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது.